உலகம் முழுவதும் பரவ்பி கிடக்கும் கொரோனாவால் இன்று வரை சுமார் 6,518 பேர் இறந்துள்ளனர். இதே 1,69.610 பேர் தாக்கம் அடைந்துள்ளனர்.
சொல்லப்போனால் இந்தியாவில் இதுவரை 114 பேர் இந்த தொற்று நோய்க்கு ஆளாகியுள்ளனர். இதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
இப்படி உலகத்தினையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால் சீனாவில் மட்டும் இதுவரை 3,213 பேர் மரணமைடைந்துள்ளனர். இதையடுத்து தற்போது இத்தாலியில் 1,809 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு அடுத்தாற்போல் ஈரானில் 724 பேரும், ஸ்பெயினில் 292 பேரும், தென் கொரியாவில் 75 பேரும் பலியாகியுள்ளனர்.

தொழில்துறையிலும் பாதிப்பு
இப்படி அடுத்தடுத்து பல நாடுகளில் அதிகரித்து வரும் மரணம் ஒரு புறம் எனில், மறுபுறம் பல நாடுகளின் பொருளாதாரம் பெரும் பின்னடைவை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். குறிப்பாக முதன் முதலாக சீனாவின் தோன்றிய இந்த வைரஸ் அங்கு பெரும் பிரச்சனையை மட்டும் அல்லாது, தொழில் துறையை உற்பத்தியையும் பாதித்துள்ளது.

முதலீடு – விற்பனை சரிவு
இதனை எதிரொலிக்கும் விதமாக கடந்த ஜனவரி - பிப்ரவரியில் அங்கு 30 வருடங்களில் இல்லாத அளவுக்கு கூர்மையான விகிதத்தில் வளர்ச்சி சரிந்துள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான சீனாவில் நகரப்புறங்களில் முதலீடுகளும், சில்லறை விற்பனைகளும் வரலாறு காணாத அளவில் முதன் முதலாக படு வீழ்ச்சி கண்டுள்ளது.

வளர்ச்சி பாதியாக குறையலாம்
உலக சுகாதார அமைப்பால் இந்த கொடிய தொற்று நோயை பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ள நிலையில், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் சீனாவின் முதல் காலாண்டு வளர்ச்சி பாதியாக குறையலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமானால் தொழில் துறை உற்பத்தி வெளியீடானது ஜனவரி - பிப்ரவரியில் 13.5% வீழ்ச்சி காணலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

முதலீடும் குறைந்தது
ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 1990களில் இருந்ததை போல மோசமான நிலையாக கணித்துள்ளது. மேலும் நிலையான சொத்து முதலீடானது கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 24.5% வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல் சில்லறை விற்பனையுல் 20.5% வீழ்ச்சி கண்டுள்ளது. ஏனெனில் கொரோனா வைரஸ் பயத்தால் நுகர்வோர் ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், திரையரங்குகள் போன்ற நெரிசலான பகுதிகளை தவிர்த்தனர். இதனால் சில்லறை விற்பனை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இன்னும் சில மாதம் ஆகும்
இந்த நிலையில் சீனா அதிகாரிகள் கடந்த வாரம் தொற்று நோயின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாக கூறினர். ஆனாலும் பொருளாதாரம் இயல்பு நிலைக்கு மீண்டு வர இன்னும் சில மாதம் ஆகும் என்று கூறியுள்ளனர். உலகெங்கிலும் வைரஸ் மிக வேகமாகப் பரவுவது மந்த நிலையின் அச்சத்தினை தூண்டுகிறது. இது சீனா பொருட்களின் தேவையை குறைக்கும். ஆக எப்படி இருந்தாலும் சீனா பொருளாதாரம் மீண்டு வருவதில் சற்று தாமதம் ஆகலாம்.