எப்பொழுதும் பாகிஸ்தானுக்கு துணை நிற்போம் என சீனா தெரிவித்திருப்பது சர்வதேச அளவில் கவனம் பெற்று இருக்கிறது. காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து துப்பாக்கி சூடு நடத்தினர் .
இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக ராஜாங்க ரீதியான நடவடிக்கைகளை எடுத்தது. இதனை அடுத்து மே 7ஆம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத முகாம்கள் மீது தாக்கியது. இந்நிலையில் பாகிஸ்தான் மே 9ஆம் தேதி இரவு வட இந்திய நகரங்களில் இருக்கும் ராணுவ தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை இந்தியா தன்னுடைய வான் பாதுகாப்பு அமைப்பின் மூலம் முறியடித்தது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பரம் தாக்குதல் நடைபெற்று வரக்கூடிய சூழலில் சீனா பாகிஸ்தானுக்கு துணை நிற்பதாக தெரிவித்திருக்கிறது. பாகிஸ்தானின் இறையாண்மையை பாதுகாக்கவும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்யவும் துணை நிற்போம் என சீனா கூறி இருக்கிறது.
பாகிஸ்தானுடன் உறுதியாக நிற்கிறோம் என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் உடன் தொலைபேசி வாயிலாக பேசிய போது வாங் யி இவ்வாறு தெரிவித்ததாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தொலைபேசி உரையாடலின் போது பாகிஸ்தான் அமைச்சர் வாங் யி இடம் இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்சினையின் தற்போதைய நிலவரம் குறித்து விளக்கினார்.
பிடிஐ நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டு இருக்கிறது. பாகிஸ்தானின் உறுதியான கூட்டாளியாக சீனா தொடர்ந்து நிற்கும் என சீன அமைச்சர் வாங் யி அப்போது வாக்குறுதி அளித்தார் என பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சவாலான காலகட்டத்தில் பாகிஸ்தான் நிதானத்துடனும் பொறுப்புடனும் செயல்பட்டதாக அப்போது வாங் யி பாராட்டினார் என பாகிஸ்தான் அரசு கூறி இருக்கிறது.
முன்னதாக பாகிஸ்தான் அமைச்சர் ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி ஆகிய நாடுகளின் வெளியுறவு துறை அமைச்சர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு இந்தியா பாகிஸ்தான் இடையிலான தற்போதைய நிலவரம் குறித்து பேசி இருக்கிறார். முன்னதாக சீன அமைச்சர் வாங் இ இந்திய தேசிய பாதுகாப்பு அஜித் தோவலுடன் தொலைபேசி வாயிலாக பேசியிருக்கிறார்.பயங்கரவாதத்திற்கு எதிராக துணை நிற்பதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்துள்ள நிலையில், சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications