சீனா உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்யும் என சீனா தெரிவித்துள்ளது.
தற்போது அதிவேகமாக செல்லக்கூடிய புல்லட் ரயில்களை தயாரிக்கும் பணிகளை உலக நாடுகள் தீவிர படுத்தியுள்ளன. அந்த வகையில் சீனா இதில் முதலிடத்தை பெற்றுள்ளது. சீனா மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய உலகின் அதிவேக ரயிலை அறிமுகம் செய்துள்ளது . தற்போது சீனாவில் சிஆர் 400 என்ற அதிவேக ரயில் பயன்பாட்டில் இருக்கிறது. இது தற்போது மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறது.

இந்த அதிவேக புல்லட் ரயிலை மேம்படுத்தி இருப்பதாக சீன அரசு தெரிவித்துள்ளது. இந்த சிஆர் 400 அதிவேக ரயிலை மேம்படுத்தி சிஆர் 450 என்ற பெயரில் புதிய புரோட்டோ டைப்பை சீன அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும் என தெரிவித்துள்ளது. இதனால் பயண நேரம் குறைவதோடு மட்டுமில்லாமல் நாட்டின் ஒரு முனையில் இருக்கும் மக்கள் எளிதாக மறுமுனைக்கு சென்று வர முடியும் என சீனாவின் ரயில்வே நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிஆர்450 அதி வேக ரயிலை பரிசோதனை செய்து பார்த்தபோது அது மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் சென்றதோடு மட்டுமில்லாமல் சர்வதேச தரத்திலான அனைத்து தரநிலைகளையும் பூர்த்தி செய்துள்ளது என சீனா தெரிவித்துள்ளது. கூடிய விரைவில் இந்த ரயிலை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர ஏதுவாக அடுத்தடுத்த பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த ரயில் இங்கு பயன்பாட்டுக்கு வந்தால் சென்னையில் இருந்து மதுரைக்கு ஒரு மணி நேரத்திலேயே சென்று விட முடியும். உலகிலேயே அதிவேக ரயில் சேவையை கொண்ட ஒரு ரயில்வே நெட்வொர்க்கை கொண்டிருக்கிறது சீனா.
சீனாவில் முக்கிய நகரங்கள் இணைக்கும் வகையில் 47 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவேக ரயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் வழிதடத்தில் அதிக எண்ணிக்கையிலான ரயில்கள் இயக்கப்படுகின்றன. லட்சக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயணம் செய்கின்றனர்.
இந்த அதிவேக ரயில் சேவைகள் மூலம் பெரிய லாபம் இல்லை என்றாலும் நாட்டின் தொழில் வளர்ச்சி மேம்பட்டுள்ளது என சீன அரசு தெரிவிக்கிறது. கூடிய விரைவில் தாய்லாந்து ,இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் அதிவேக ரயில் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவும் புல்லட் ரயில் திட்டங்கள் மூலம் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications