சீனா: சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு அன்ஹாப்பி லீவ் என்ற ஒரு புதிய விடுமுறையை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி மகிழ்ச்சியான மனநிலையில் இல்லாத ஊழியர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக் கொள்ளலாம்.
அண்மைக் காலமாகவே வேலைக்கு செல்லக்கூடிய நபர்கள் வேலைக்காக எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை ஒதுக்குகிறார்களோ அதே போல அவர்களது குடும்பம் மற்றும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சமமான அளவில் நேரத்தை ஒதுக்க வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஒரு நபரால் எப்படி தன்னுடைய வேலையில் சிறப்பாக செயல்பட முடிகிறதோ அதேபோல தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிறப்பான முறையில் செயல்பட முடியும் என சொல்லப்படுகிறது.
எனவே தான் வொர்க் லைஃப் பேலன்ஸ் என்ற கருத்தாக்கம் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. நம் நண்பர்கள் வட்டத்தில் கூட குடும்பத்துடன் நேரத்தை செலவிட முடியாமல் பலர் புலம்புவதை கேட்டிருப்போம். இந்த பிரச்னைக்கு தீர்வு அளித்துள்ளது சீனாவை சேர்ந்த ஒரு நிறுவனம்.
தி சவுத் சைனா போஸ்ட் இதழில் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவை சேர்ந்த ஒரு சில்லறை வர்த்தக நிறுவனம் தங்களது ஊழியர்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு சமமான முறையில் நேரம் ஒதுக்குவதை உறுதி செய்வதற்காக அன்ஹேப்பி லீவ் என்ற ஒரு புதிய முறையை அறிமுகம் செய்துள்ளது.
இதன்படி ஊழியர்கள் பணிக்கு வரக்கூடிய மனநிலையில் இல்லாத ஊழியர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அதாவது , மகிழ்ச்சியான மனநிலையோடு மட்டுமே பணிக்கு வர வேண்டும் இல்லையென்றால் கூடுதலாக 10 நாட்கள் வரை விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பாங் டோங் லாய் என்பது சீனாவில் செயல்பட்டு வரக்கூடிய சில்லறை வர்த்தக நிறுவனம் ஆகும். இதன் நிறுவனர் யூன் டோங்கலாய் இந்த புதிய விடுமுறை கான்செப்ட்டை அறிவித்துள்ளார். ” ஊழியர்களே நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் பணிக்கு வர வேண்டாம், போதுமான அளவு விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள், விடுமுறை எடுப்பது உங்களின் உரிமை” எனக் கூறியுள்ளார்.
ஊழியர்கள் இதுபோல கூடுதலாக விடுமுறை கேட்கும் போது அவர்களின் மேலாளர்கள் விடுமுறை அளிக்க முடியாது என ஒருபோதும் மறுக்கக்கூடாது இவ்வாறு விடுமுறை அளிக்க மறுப்பது என்பது மிகப்பெரிய விதி மீறல் என அவர் கூறியுள்ளார். பாங் டாங் லாய் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஊழியர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. பலர் இந்த நிறுவனத்தில் வேலை கிடைக்குமா என முயற்சி செய்து வருகிறார்களாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications