ரஷ்யா: சீன அதிபர் ஜி ஜின்பிங் நாளை மறுதினம் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக மோதல்கள் அதிகரிப்பு, இந்தியா பாகிஸ்தான் இடையிலான எல்லை பதற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சனைகள் நிலவும் சூழலில் ஜி ஜின்பிங்கின் ரஷ்ய பயணம் அமைந்திருக்கிறது.
மே 7ஆம் தேதி ரஷ்யாவிற்கு செல்லும் ஜி ஜின்பிங் 10ஆம் தேதி வரை அங்கே தங்கி இருப்பார் என்றும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ள இருக்கிறார் என்றும் சீன அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. இரண்டாம் உலகப் போரில் நாசி ஜெர்மனி படைகளை சோவியத் யூனியன் தோற்கடிக்கச் செய்தது. இதன் 80 ஆவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக தான் சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக ரஷ்ய அரசும் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இந்த பயணத்தின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்த பேச்சு வார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, பிராந்திய ரீதியிலான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது.
அது தவிர பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சர்வதேச அளவிலான பிரச்சனைகள் பிராந்திய ரீதியிலான பிரச்சனைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதிப்பார்கள் என ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு தெரிவிக்கிறது. மேலும் ரஷ்யா மற்றும் சீனா இடையிலான உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்திருக்கிறார். இதனால் சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. சீன பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்தும் பேசப்படும் என சொல்லப்படுகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் அது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியன் , நாசி படைகளை தோற்கடிக்க செய்தது .இதனை அடுத்து ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார். 1945 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகளின் 80ஆவது ஆண்டு கொண்டாட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கொண்டாட்டத்தில் சீன அதிபரை தவிர பிரேசில் மற்றும் செர்பியா நாடுகளின் அதிபர்களும், ஸ்லோவாக்கியா பிரதமரும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்த நிகழ்வை தொடர்ந்து ரஷ்ய அரசு மே 9ஆம் தேதியிலிருந்து உக்ரைனில் மூன்று நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications