அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பதவியேற்பு விழாவுக்குப் பின்பு பல முக்கியமான உத்தரவுகளை வெளியிடுவார் என்பது அனைவரும் எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் முதல் நாளிலேயே அதிரடியான முடிவுகள் எடுக்கமாட்டார் என்ற கருத்தும் இருந்தது. ஆனால் டிரம்ப் அதை உடைத்து பலருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார். குடியிருப்பு விதிமுறைகள் முதல் பிற நாடுகள் மீது வரி விதிப்பு வரையில் பல முக்கியமான உத்தரவுகளை வெளியிட்டார்.
டொனால்ட் டிரம்ப் முதல் நாளில் கனடா மற்றும் மெக்சிகோ நாட்டின் இறக்குமதி மீது 25 சதவீதம் வரியை விதிக்கவும், இதை பிப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்தவும் அறிவித்தார். ஆனால் பலரும் எதிர்பார்த்த சீனா மீதான வரி விதிப்பை டிரம்ப் அறிவிக்காதது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் உருவாக்கியது. இதேபோல் டிக்டாக் செயலிக்கும் 75 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

சீனா மீது புதிய வரி மற்றும் கட்டணங்களை டிரம்ப் அறிவிக்காதது முதலீட்டாளர்களுக்குச் சற்று நிம்மதியைக் கொடுத்துள்ளது. இதனால் செவ்வாயன்று சீனப் பங்குகளும், சீன நாணயமான யுவானும் டக்கென உயர்ந்தது. இருப்பினும், இது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் மேம்படும் என்பதற்கான உறுதியான அறிகுறியாகக் கருதப்படவில்லை.
டொனால்டு டிரம்ப் தனது 2வது ஆட்சியில் வர்த்தகச் சீர்திருத்தம், குடியேற்றம் கொள்கை, வரி குறைப்பு மற்றும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது போன்ற முக்கிய இலக்குகளைக் கொண்ட ஒரு விரிவான திட்டத்துடன் வெள்ளை மாளிகைக்குத் திரும்பியிருந்தார்.
தனது பதவியேற்பு உரையில் அவர் சீனாவை ஒரு முறைகூட குறிப்பிடவில்லை. இதேபோல் டிரம்ப் ஏற்கனவே அறிவித்தபடி சீனா மீது வரி விதிக்கப்படவில்லை. இது சீன பங்குச் சந்தைகளில் ஒரு தற்காலிக ஏற்றத்தை உருவாக்கிய அதே வேளையில் அமெரிக்க டாலர் மதிப்பைச் சரிவுக்குத் தள்ளியது.
கடந்த வாரம் ஒரு சீன அதிபர் ஜி ஜின்பிங், டொனால்டு டிரம்ப்-ஐ தொலைப்பேசியில் அழைத்துப் பேசியுள்ளார், இந்த ஒரு போன் கால் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் பதற்றத்தைக் குறைத்துள்ளதாகத் தெரிகிறது. இந்த போன் கால் முடிந்ததும், டிரம்ப் "மிகவும் நல்லப்படியாக இந்த கால் அமைந்தது" என்று கூறினார். இதைத் தொடர்ந்து நேற்று சீனா மீது வரியை விதிக்காமல் இருப்பது சர்வதேச சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. இதேவேளையில் இது தற்காலிகமானது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமை மத்திய நேர வர்த்தக இடைவேளையின் போது, சீனா பங்குச்சந்தையில் ஹாங் செங் சைனா எண்டர்பிரைசஸ் இன்டெக்ஸ் 1.3% உயர்ந்தது. அதேபோல, மெயின்லேண்ட் பங்குச்சந்தைக்கான அளவுகோலான சிஎஸ்ஐ 300 இன்டெக்ஸ், சிறிது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டாலும், இறுதியில் 0.4% லாபம் பெற்றது. ஆஃப்ஷோர் யுவான் 0.1% சரிந்தாலும், முந்தைய நாள் இரவில் ஏற்பட்ட உயர்வை தக்க வைத்துக் கொண்டது.
டொனால்டு டிரம்ப் தனது முதல் ஆட்சியில் சீனாவை அடித்துத் துவைத்த நிலையில் 2வது ஆட்சியில் சீனாவுக்கும், சீன நிறுவனங்களுக்கும் இறக்கம் காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதேவேளையில் டிரம்ப் இந்த தளர்வுகள் மூலம் அமெரிக்க நிறுவனங்களையும், முதலீடுகளையும், சீன நாட்டுக்குள் நுழைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது. இல்லையெனில் டிரம்ப் சீனா-வை விட்டுப்பிடிக்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.


Click it and Unblock the Notifications