இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்தது அறிந்த ஒரு விஷயமே. ஆனால் கொரோனாவின் வருகைக்கு பிறகு பாகிஸ்தான் கடுமையான கடன் பிரச்சனை மற்றும் நிதி பற்றாக்குறையும் நிலவி வருகின்றது.
வல்லரசு நாடான சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளே கொரோனாவின் காரணமாக பின்னடைவை சந்தித்த நிலையில், பாகிஸ்தான் கடன் பிரச்சனைக்குள் தள்ளப்பட்டிருப்பது இயல்பான விஷயம் தான்.
எனினும் மூன்று ஆண்டுகளுக்குள் இரு மடங்கு அளவுக்கு கடன் எட்டியிருப்பது தான், கவலையளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகின்றது.
இருமடங்கு கடன்
இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்ட அறிக்கையின் படி, முன்னதாக 10.45 பில்லியன் டாலர் கடன் இருந்த நிலையில், 2020 - 21ம் நிதியாண்டில் 15.32 பில்லியன் டாலர் புதிய வெளி நாட்டு கடனை பெற்றுள்ளது பாகிஸ்தான்.
இது குறித்து தி எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூனின் கூற்றுப்படி, தற்போதைய அரசாங்கம் பாகிஸ்தானின் கடனை, மூன்றே ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
எதற்கு கடன்
இது குறித்து பொருளாதார விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பு பற்றாக்குறையினை குறைக்கவும், அன்னிய செலவாணி கையிருப்பினை வலுப்படுத்தவும், வெளி நாட்டுக் கடன் சேவை திறனை அதிகரிக்கவும், நீர்த் துறையின் வளர்ச்சிக்கு தேவையான கூடுதல் நிதியுதவி வழங்கவும் இந்த கடன் சேர்க்கப்பட்டுள்ளது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
சாதனை அளவை எட்டலாம்
நடப்பு கணக்கு பற்றாக்குறையை ஈடுகட்ட அதிக கடன் வாங்குவது, ஏற்கனவே குறையத் தொடங்கியுள்ளது எனவும் செய்திகள் சுட்டிக் காட்டியுள்ளது.
எனினும் இறக்குமதி காரணமாக அதிகரிக்கும் நடப்பு கணக்கு பற்றாக்குறையால் ஏற்படும் அழுத்தத்தினை குறைப்பதற்காக, மற்றொரு ஆண்டில் கடன் வாங்குவது சாதனை அளவை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் ரூபாய் 30.5% வீழ்ச்சி
கடந்த செப்டம்பர் மாதத்தில் நிதி அமைச்சகத்தின் மொத்த பொது கடனில் 2.9 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அதிகரித்துள்ளது. இது பணமதிப்பு நீக்கத்தால் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் இம்ரான் கானின் அரசாங்கத்தின் கீழ், மூன்று ஆண்டுகள் மற்றும் 4 மாதங்களில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தானின் ரூபாய் மதிப்பு 30.5% வீழ்ச்சி கண்டுள்ளது.
தற்போதைய நிலவரம் என்ன?
தி நியூஸ் இண்டர்நேஷனல் படி, பாகிஸ்தானிய ரூபாயின் மதிப்பானது ஆகஸ்ட் 2018ல் அமெரிக்க டாலருக்கு எதிராக 123 ரூபாயாக இருந்தது. இது டிசம்பர் 2021ல் 177 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. கடந்த 40 மாதங்களில் மட்டும் 30.5% வீழ்ச்சி கண்டுள்ளது. இது மிக மோசமான வீழ்ச்சிகளில் ஒன்றாகும்.


Click it and Unblock the Notifications