அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் குடியேற்ற துறையில் இயங்கி வந்த 20 நீதிபதிகளை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே அரசு செலவினங்களை குறைப்பது, அரசு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பது என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாகவே நீதிபதிகள் பணி நீக்கம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி வெள்ளிக்கிழமை அன்று டிரம்ப் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் குடியேற்றத்துறையில் பணியாற்றி வரும் 20 நீதிபதிகள் (immigration judge) பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

இவர்களில் 13 பேர் புதிதாக பதவி ஏற்க இருந்தவர்கள், ஐந்து பேர் கூடுதல் தலைமை நீதிபதிகளாக பணியாற்றி வந்தவர்கள், 2 பேர் நீதிபதிகளாக பணியாற்றியவர்கள் என தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு எந்தவித நோட்டீசும் வழங்காமலே திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கு அரசு ஊழியர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட நீதிபதிகளுக்கு மாற்றாக வேறு நபர்கள் நியமனம் செய்யப்படுவார்களா என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
தற்போதைக்கு அமெரிக்காவில் குடியேற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகள் இலட்சக்கணக்கில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் இந்த துறை சார்ந்த நீதிபதிகளை பணிநீக்கம் செய்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது குடியேற்றத்துறை தொடர்பாக 3.7 மில்லியன் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. இந்த வழக்குகளை தீர்ப்பதற்கு பல ஆண்டுகள் ஆகும் என சொல்லப்படும் நிலையில், அதனை வேகப்படுத்தாமல் டிரம்ப் நிர்வாகம் நீதிபதிகளை பணி நீக்கம் செய்திருப்பது மேலும் இந்த வழக்குகளில் முடிவு எட்டப்படுவதை தாமதப்படுத்துகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக டிரம்ப் அதிபராக முதன்முறை பதவி வகித்த போது குடியேற்றம் சம்பந்தமாக லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் விரைவில் அந்த வழக்குகளை நீதிபதிகள் முடித்து வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார் .பல்வேறு அரசியல் தலைவர்களும் குடியேற்றம் சம்பந்தப்பட்ட வழக்குகளை விரைவில் முடித்து வைக்க வேண்டும், இதற்காக இந்த துறைக்கு கூடுதலாக ஊழியர்களை நியமனம் செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில் டிரம்ப் நிர்வாகம் நீதிபதிகளை திடீரென பணி நீக்கம் செய்துள்ளது.
முன்னதாக டிரம்ப் நிர்வாகம் பயிற்சி நிலையில் இருக்கும் ஊழியர்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்யும்படி அரசு துறைகளுக்கு உத்தரவு பிறப்பித்தது. டொனால்ட் டிரம்ப் அரசு , அரசின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் எலான் மஸ்க் தலைமையில் அரசு செயல் திறன் துறை என்ற துறையை உருவாக்கி இருக்கிறது. இந்த துறை அரசு பணிகளை டிஜிட்டல் மயமாக்குவது என்பன உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications