அமெரிக்கா: அமெரிக்க அதிபராக பதவி ஏற்றதிலிருந்தே டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற வேண்டும் என எண்ணுபவர்களுக்கு பிரத்தியேக கோல்டு கார்டு என்ற திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்தார்.
இதன்படி அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேற எண்ணக்கூடிய நபர்கள் 5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து இந்த கோல்டு கார்டை பெற்றுக் கொண்டால் அவர்களுக்கு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை கிடைத்துவிடும். இந்த கோல்டு கார்டு விசா திட்டத்திற்கு அமெரிக்காவில் ஆதரவும் எதிர்ப்பும் இருக்கிறது. இந்த திட்டத்தை ஆதரிப்பவர்கள் இதன் மூலம் அமெரிக்காவுக்கு கணிசமான அளவு முதலீடு வரும் என கூறுகின்றனர். திட்டத்தை எதிர்ப்பவர்கள் அமெரிக்க குடியுரிமையை ஐந்து மில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்கிறார் என விமர்சனம் செய்கின்றனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை ஏற்கனவே அங்கே ஈபி -5 என்ற முதலீட்டாளர் விசா திட்டம் நடைமுறையில் இருக்கிறது. அந்த திட்டத்திற்கு மாற்றாக தான் டிரம்ப் கோல்டு கார்டு விசா திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். இது பணக்காரர்களுக்கான விசா என்ற வாதத்தை அவர் முன்வைக்கிறார். பணக்காரர்கள் அல்லது மிகவும் திறமையான நபர்கள் அமெரிக்காவில் குடியுரிமை பெறுவதற்கான பாதையாக கோல்டு கார்டு திட்டம் இருக்கும் என டிரம்ப் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் மூலம் திறமையான நபர்களை அமெரிக்காவிற்குள் கொண்டு வருவதற்கு பணக்காரர்கள் பணம் செலுத்துவார்கள் என டிரம்ப் தெரிவித்துள்ளார். தற்போது பயன்பாட்டில் இருக்கக்கூடிய ஈபி5 திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர்களை முதலீடு செய்து குறைந்தது 10 வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்க வேண்டும். அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஐந்து மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்ட கோல்டு கார்டினை அறிமுகம் செய்திருக்கிறார் .அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இது பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இந்த கோல்டு கார்டில் டிரம்பின் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது. நான்தான் முதன் முதலில் இந்த கார்டை வாங்கி இருக்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 5 மில்லியன் டாலர்கள் கொடுத்தால் இந்த கோல்டு கார்டு உங்களுக்கு கிடைக்கும் அது மட்டும் அல்ல அமெரிக்க குடியுரிமையும் உங்களுக்கு கிடைத்து விடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய திறன் கொண்ட பெரும் பணக்காரர்களுக்கான ஒரு விசா திட்டமாக இது இருக்கும் என சொல்லப்படுகிறது. இதில் விண்ணப்பம் செய்பவர்கள் அமெரிக்காவில் வந்து தொழில் புரிவார்கள், இங்கு நிறைய பணத்தை செலவிடுவார்கள் அதன் மூலம் நிறைய வரி செலுத்துவார்கள், நிறைய வேலை வாய்ப்புகளையும் உருவாக்குவார்கள் , இது தான் கொண்டு வந்த திட்டங்களிலேயே மிகவும் வெற்றிகரமான திட்டமாக இருக்கும் என டிரம்ப் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications