துபாய்: வித்தியாசமான விதிகள், கலாச்சாரம், சம்பிரதாயங்களுக்கு பெயர் போன ஊர் ஐக்கிய அரபு அமீரகம். அதே போல நம் மக்கள் பிழைக்க அதிகமாக தேர்ந்தெடுக்கும் ஊரும் அதே ஐக்கிய அரபு அமீரகம் தான். சரி விஷயத்துக்கு வருவோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகரான துபாயில் தான் நாம் மேலே தலைப்பில் சொன்னது போல இனி உண்மையாகவே நடக்கப் போகிறதாம். இனி துபாய் நகராட்சிக்குள், பொது வாகனம் நிறுத்துமிடத்தில் யாராவது தங்கள் கார்களை அழுக்காக வைத்திருந்தால் அவர்களுக்கு 10,000 ரூபாய் (500 திராம்) அபராதம் விதிக்கப்படும் எனச் சொல்லி கிளி கிளப்பி இருக்கிறார்கள் துபாய் நகராட்சி அதிகாரிகள்.

இப்படி அழுக்கான கார்களை பொது வாகனம் நிறுத்தும் இடங்களில் அழுக்காக நிறுத்துவதால் துபாய் நகரத்தின் அழகு மதிப்பும் கெடுகிறதாம். எனவே அனைவரும் தங்கள் கார்களை சுத்தமாக வைத்திருக்கச் சொல்லி அறிவுறுத்தி இருக்கிறது துபாய் நகராட்சி .
குறிப்பாக நீண்ட நாட்களுக்கு வெளியூர் செல்லும் பயணிகள் இதை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி இருக்கிறார்கள். அதோடு அழுக்காக இருக்கும் கார்களை துபாய் நகராட்சி அதிகாரிகள் (Dubai city's image-conscious authorities) கண்டுபிடித்தால், விதி மீறல் எனச் சொல்லி முதலில் 500 திராம்களுக்கு (10,000 ரூபாய்க்கான) அபராதம் விதிக்கப்படும்.
அடுத்த 15 நாட்களுக்குள் காரை ஒழுங்காகச் சுத்தப்படுத்தவில்லை என்றால், உடனடியாக அழுக்கான கார்களை அரசாங்கம் பறிமுதல் செய்துவிடும் என நெருப்பை அள்ளிக் கொட்டி இருக்கிறார்கள்.
பறிமுதல் செய்யப்படும் கார்களை எல்லாம் ஏதோ நம்மூர் காவல் நிலையத்தில் வைத்திருப்பது போல ஒரு ஓரத்தில் நிறுத்தப்படாதாம். அடுத்த சில நாட்களிலேயே பழைய சாமான் கடைகளுக்கு எடுத்துச் செல்லப்படுமாம். அதன் பிறகும் வாகனத்தின் உரிமையாளர் தன் கார்களுக்கான அபராதங்களைச் செலுத்தவில்லை என்றால், பறிமுதல் செய்த கார்களை முறையாக ஏலம் விட்டு விற்று விடுவார்களாம்.
இந்த அறிவிப்பை துபாய் நகராட்சி அதிகாரிகள் பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருக்கிறார்கள். என்னய்யா இது வித்தியாசமான சட்டமா இருக்கே..? நம்ம கார் சுத்தமா இல்லன்னா கூட 10,000 அபராதமா..?


Click it and Unblock the Notifications