அமெரிக்கா: எலான் மஸ்க்கால் முன்பை போல டெஸ்லா நிறுவனத்தின் மீது கவனம் செலுத்த முடியவில்லை எனவே அவர் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டும் என டெஸ்லா முதலீட்டாளர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் ஒரு தளத்திற்கு பேட்டி அளித்திருக்கும் எலான் மஸ்க் தனக்கு 17 வேலைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருக்கும் எலான் மஸ்க், தனக்கு சொந்தமாக டெஸ்லா என்ற மின்சார கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட நிறுவனம் , தி போரிங் கம்பெனி என்ற பெயரில் சுரங்கத்துறை சார்ந்த நிறுவனம் என பல்வேறு நிறுவனங்களையும் செயல்படுத்தி வருகிறார். அது தவிர அமெரிக்க அரசின் செயல் திறன் துறைக்கு தலைமை பொறுப்பு வகித்து வருகிறார்.

இவ்வாறு அவருக்கு பல்வேறு வேலைகள் இருப்பதால் அவரால் முன்பை போல டெஸ்லா நிறுவனத்தின் மீது கவனம் செலுத்த முடியவில்லை என்றும் இதன் காரணமாகவே டெஸ்லா நிறுவனம் வீழ்ச்சி அடைந்து வருவதாகவும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். எலான் மஸ்க் தன்னுடைய அனைத்து பணிகளையும் விட்டுவிட்டு டெஸ்லாவிற்கு திரும்ப வேண்டும் இல்லை என்றால் டெஸ்லா தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகி விட்டு அந்த பொறுப்புக்கு ஒரு பொருத்தமான நபரை நியமனம் செய்ய வேண்டும் என தொடர்ந்து முதலீட்டாளர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர் .
இந்த சூழலில் முதலீட்டாளர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் எலான் மஸ்க் அளித்துள்ள பேட்டியில் தனக்கு 17 வேலைகள் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மஸ்க் தலைமையிலான அரசு செயல் திறன் துறை வேண்டுமென்றே அரசு ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதற்கு இந்த பேட்டியில் அவர் பதில் தந்துள்ளார். தங்களுடைய கவனம் அரசுக்கு இருக்கும் தேவையற்ற செலவுகளை குறைப்பது மட்டும்தான் என தெரிவித்துள்ளார். யாரையுமே நாங்கள் பணியில் இருந்து நீக்கவில்லை , விருப்பம் இருப்பவர்கள் பணியில் இருந்து விலகிவிடலாம் அவர்களுக்கு குறிப்பிட்ட மாதங்களுக்கான சம்பளத்தை வழங்குகிறோம் என்று தான் தெரிவித்திருக்கிறோம் இதனால் பலரும் தாங்களாக முன்வந்து பணியில் இருந்து விலகி இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அரசின் செலவினங்களை குறைத்து செயல் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் மே மாதத்திற்குள் அரசு செலவினத்தில் ஒரு ட்ரில்லியன் டாலரை குறைத்துவிட்டு இந்த பொறுப்பில் இருந்து தான் விலகிக் கொள்ளப் போவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
இதனிடையே அரசு செயல் திறன் துறையின் மீது அதிக கவனம் செலுத்துவதால் தன்னுடைய நிறுவனங்களை கைவிட்டுவிட்டார் குறிப்பாக டெஸ்லா நிறுவனத்தை அவர் கண்டு கொள்வதே இல்லை என முதலீட்டாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அரசியல் ஆதரவு மற்றும் சில பொறுப்புகள் அவரை டெஸ்லா நிறுவனத்தில் கவனம் செலுத்துவதிலிருந்து திசை திருப்புகின்றன என முதலீட்டாளர்கள் கூறுகின்றனர் .
டெஸ்லா நிறுவனத்தின் விற்பனை சரிந்து அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பும் சரிந்து இருக்கிறது. உலகளவில் டெஸ்லா மின்சார கார்களை விட சீனாவின் பிஒய்டி நிறுவனத்தின் மின்சார கார்கள் அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன.


Click it and Unblock the Notifications