டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட முன்னணி தொழில் நிறுவனங்களின் உரிமையாளரும் உலகின் நம்பர் ஒன் பணக்காரருமான எலான் மஸ்க். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர்.
எலான் மஸ்க் தெரிவிக்க கூடிய கருத்துக்கள் அனைத்துமே சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் கவனம் பெறும். வழக்கமாக தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்தும், வருங்கால உலகம் குறித்தும், மனிதர்களுக்கான தன்னுடைய கனவுகள் குறித்தும் தான் எலான் மஸ்க் பேசுவார். ஆனால் இந்த முறை அவர் போர் குறித்து குறிப்பாக உலகப் போர் குறித்து பேசி இருப்பது கவனத்தை பெற்றிருக்கிறது.

ஹண்டர் ஹேஷ் என்ற நபர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் போர்கள் இல்லாததால் அரசாங்கங்கள் தங்களின் செயல் திறனை இழந்துவிட்டன என்பதை சூசகமாக கூறி இருந்தார். அதற்கு பதில் அளித்துள்ள எலான் மஸ்க் இந்த உலகத்தில் போரை நம்மால் தவிர்க்க முடியாது என கூறியிருக்கிறார் .அடுத்த ஐந்து ஆண்டுகள் அல்லது அதிகபட்சம் பத்து ஆண்டுகளிலாவது நிச்சயம் உலகில் ஒரு போர் ஏற்படும் பதில் அளித்து இருக்கிறார்.
எலான் மஸ்கின் கூற்றுப்படி 2030 அல்லது 2035 ஆம் ஆண்டுக்குள் உலகம் ஒரு பெரிய போரை சந்திக்கும் என தெரிவித்திருக்கிறார். ஆனால் தன்னுடைய இந்த பதிலுக்கு எந்த ஒரு விளக்கத்தையும் வெளியிடவில்லை. இதுதான் உலகெங்கிலும் டிரெண்டாகி இருக்கிறது. சமூக வலைதள வாசிகள் எலான் மஸ்க் எதனை குறிப்பிட்டு இவ்வாறு தெரிவிக்கிறார் என விவாதம் நடத்த தொடங்கிவிட்டனர் .
முன்னதாக டிரம்ப் நிர்வாகத்தில் அரசு செயல் திறன் துறையின் தலைவராக பதவி வகித்து வந்தவர் . மனித வடிவிலான ரோபோக்களை உருவாக்குவதில் இவர் நிறுவனம் கவனம் செலுத்துகிறது. ஏஐ மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்திலும் இவர் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. இத்தகைய சூழலில் தான் மஸ்கின் இந்த வார்த்தைகள் கவனம் பெறுகின்றன.
தற்போது அமெரிக்கா சீனா இடையே நிகழும் நிலவும் வர்த்தக மோதல் , அமெரிக்க டாலரை வலுவிழக்க செய்ய வேண்டும் என்பதற்காக சீனா எடுத்து வரக்கூடிய மறைமுக நடவடிக்கைகள் , சீனாவின் தங்கம் வாங்கும் போக்கு , ஏஐ தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவிற்கும் இடையே இருக்கக்கூடிய பல்வேறு போட்டிகள் என பல விஷயங்கள் பேசப்படுகின்றன.
இது ஒரு புறம் இருக்க அனைத்து நாடுகளும் தங்களுடைய ராணுவ பலத்தையும் அதிகப்படுத்தி வருகின்றன. எனவே ஐந்து ஆண்டுகளில் போர் தவிர்க்க முடியாதது என்றால் எதற்காக இந்த போர் நடைபெறப்போகிறது என்பதுதான் தற்போது பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. ஆயுதங்களுக்கான போராக அது இருக்குமா? அல்லது இந்த ஏஐ தொழில்நுட்பத்திற்கான போராக இருக்குமா அல்லது தங்கத்திற்கான போராக இருக்குமா என நெட்டிசன்கள் குழப்பத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications