சியாட்டல்: நாளுக்கு நாள் பல நாடுகளில் தனது ராஜ்ஜியத்தை பரப்பி வரும் கொரோனா வைரஸ், அமெரிக்காவிலும் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது.
இந்த நிலையில் பல அமெரிக்க நிறுவனங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய பரிந்துரைத்து வருகின்றன.
இப்படி ஒரு நிலையில் தான் பேஸ்புக் நிறுவனம் சியாட்டலில் உள்ள தனது அலுவலகத்தையே மார்ச் 9-ம் தேதி வரை மூடியுள்ளது.
வீட்டில் இருந்து வேலை செய்ய பரிந்துரை
கடந்த சில தினங்களுக்கு முன்பு பேஸ்புக் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த தொற்று நோயானது மற்ற ஊழியர்களுக்கும் பரவாமல் இருக்க பேஸ்புக் நிறுவனம் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்ய பரிந்துரைத்துள்ளது. இதனையடுத்து தனது சியாட்டல் அலுவலகத்தை மார்ச் 9-ம் தேதி வரை மூடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புக்கு முன்னுரிமை
இது குறித்து பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் ட்ரேசி கூற்றுப்படி, ஸ்டேடியம் கிழக்கு அலுவலகத்தை தளமாகக் கொண்ட ஒரு ஒப்பந்தகாரருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு அனைவரின் உடல் நலம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க பொது சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுகிறோம் என்று கிளேட்டன் மேற்கோளிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட ஊழியரை ஆதரிக்கிறோம்
பாதிக்கப்பட்ட ஒப்பந்தக்காரர் பிப்ரவரி 21 அன்று பேஸ்புக் அலுவலகத்தில் கடைசியாக இருந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சியாட்டலில் அனைத்து பேஸ்புக் ஊழியர்களும் மார்ச் 31 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தனிமைப்படுத்தப்பட்ட பாதிக்கப்பட்ட ஊழியரை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தொற்று நோய் பாதிப்பு
பேஸ்புக் கிட்டதட்ட 20 அலுவலகங்களில் 5,000 பேருக்கும் மேற்பட்டோரை சியாட்டல் பகுதியில் வேலைக்கு அமர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த வாரத் தொடக்கத்தில் அமேசானின் இரண்டு ஊழியர்கள், இத்தாலியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியது. இதனால் பரவி வரும் நோய் தொற்று நோய் பரவுவதை மெதுவாக்குவதற்காகவும், வீட்டிலிருந்து வேலை செய்யவும், கூட்டங்களை ஒத்திவைக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications