ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனையானது கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய நிலையில் இன்று வரை நீட்டித்துக் கொண்டுள்ளது.
இதற்கு பல நாடுகளும் தங்களது எதிர்ப்பு குரல்களை தெரிவித்து வரும் நிலையில், ரஷ்யாவிலேயே சில எதிர்ப்புகளும் கிளம்பின.
ரஷ்யாவின் பிரபல தொழிலபதிபரும் பில்லியனருமாக இருந்த யூரி மில்னர் தனது ரஷ்ய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
யூரி மில்னரின் அதிரடி முடிவு
யூரி மில்னர் கிரீமியாவை ரஷ்யா இணைத்து கொண்டதை அடுத்து, 2014லியே தனது குடும்பத்தினருடன் ரஷ்யாவில் இருந்து வெளியேறினார். தற்போது அதிகாரப்பூர்வமாக தனது ரஷ்ய குடியுரிமையை கைவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து யூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேலிலும் குடிமகன்
பிரபல முதலீட்டு நிறுவனமான டிஎஸ்டி குளோபல் (DST Global) நிறுவனத்தின் நிறுவனரான யூரி, 1999ல் இருந்தே இஸ்ரேலிய குடிமகனாகவும் இருந்து வந்துள்ளார்.
யூரிக்கு ரஷ்யாவில் எதுவும் பெரியளவில் சொத்துகள் இல்லை. பெரும்பாலும் அண்டை நாடுகளிலேயே உள்ளது. இது யூரியின் இந்த் அறிவிப்பு மற்றொரு முக்கிய காரணமாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கண்டனம்
யூரியின் லாப நோக்கமற்ற அமைப்பான பிரேக்துரு பிரைஸ் அறக்கட்டளை, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கிய போதே கண்டனம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் தான் யூரி மில்னரின் இந்த அறிவிப்பும் வந்துள்ளது.
பல்வேறு நாடுகளில் முதலீடு
டிஎஸ்டி குளோபல் நிறுவனம் பிரபல சீன இ காம்ர்ஸ் நிறுவனமான அலிபாபா, ஜேடி.காம் போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்து, பெரும் லாபத்தினை ஈட்டியுள்ளது. இது தொடர்ந்து சர்வதேச அளவில் இணைய உலகில் முதலீட்டினை செய்து வருகின்றது. உலகின் 80-க்கும் மேற்பட்ட பல்வேறு நாடுகளில் தனது முதலீட்டினை செய்துள்ளது.
அலுவலகம் எங்கு?
இந்த முதலீட்டு நிறுவனம் சிலிக்கான் வாலி, நியூயார்க், லண்டன், ஹாங்காங், பெய்ஜிங் உள்ளிட்ட பகுதிகளில் அலுவலகத்தினை கொண்டுள்ளது. தனது ரஷ்யா குடியுரிமையை விட்டு விட்டாலும், ரஷ்யாவில் முதலீடுகள் தொடருமா? ஏற்கனவே செய்த முதலீடுகள் குறித்தும் எந்த அதிகாரர்ப்பூர்வ தகவலும் இல்லை.
எப்படியிருப்பினும் மிகசிறந்த முதலீட்டாளரையும், தொழிலதிபரையும் ரஷ்யா இழந்து விட்டது. இனியேனும் விளாடிமிர் புடின் இதனை பற்றி யோசிப்பாரா? இது புடினின் முடிவில் மாற்றத்தினை ஏற்படுத்துமா? பொறுத்திருந்து தான் பார்ப்போமே.


Click it and Unblock the Notifications