வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே பணி, அதுவும் தினசரி 6 மணி நேரம் மட்டுமே வேலை செய்தால் போதும் என்கிற ரீதியில், ஃபின்லாந்து அரசின் பிரதமர் சன்னா மரின் அறிவித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
பின்லாந்தின் 36 வயதான பிரதமர் சன்னா மரின், பெயரில் வெளியாகி இருக்கும் இந்த அறிவிப்புகள் உண்மை அல்ல என்பதை ஃபின்லாந்து அரசாங்கமே தன் ட்விட்டர் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு தெளிவாகச் சொல்லி இருக்கிறது.

Finnish Government என்கிற பெயரில், ஒரு ட்விட்டர் பக்கம் இருக்கிறது. இந்த ட்விட்டர் பக்கத்தை ஃபின்லாந்து அரசாங்கத்தின் தகவல் தொலைத் தொடர்புத் துறையும், ஃபின்லாந்து பிரதமர் அலுவலகமும் நிர்வகிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். இதற்கு அதிகாரபூர்வமான ப்ளூ டிக்கும் வழங்கி இருக்கிறது ட்விட்டர் நிறுவனம்.
ஃபின்லாந்து அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் "ஃபின்லாந்து அரசு திட்டங்களில் வாரத்துக்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்கிற திட்டம் இல்லை. தற்போதைய பிரதமர் மரின் சன்னா, கடந்த ஆகஸ்ட் 2019-ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, இதைப் பற்றிப் பேசினார். அதன் பிறகு இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" எனச் சொல்லி இருக்கிறார்கள்.
கடந்த ஆகஸ்ட் 2019-ல், நம் ஃபின்லாந்து பிரதமர் மரின் சன்னா, போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது பேசிய வார்த்தைகள் இப்போது செய்திகளாக டிரெண்டாகத் தொடங்கி இருக்கின்றன. வாரத்துக்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை மற்றும் நாள் ஒன்றுக்கு 6 மணி நேரம் தான் வேலை என்கிற வதந்திக்கு, ஃபின்லாந்து அரசு கடந்த ஜனவரி 07, 2020 அன்று மாலை 5.54-க்கு தன் டிவிட்டர் பக்கத்தில் மேலே சொன்ன கருத்தை வெளியிட்டார்கள்.
வதந்திகள் பரவிய அளவுக்கு, ஃபின்லாந்து அரசாங்கம் வெளியிட்ட அதிகார ட்விட்டர் பதிவு வேகமாகப் பரவவில்லை போல. ஆகையினால் பலரும் ஃபின்லாந்து அரசு உண்மையாகவே இப்படி தொழிலாளர்களுக்கு வேலை நேரங்களில் மாற்றம் கொண்டு வந்துவிட்டதாகச் செய்திகள் பரவிக் கொண்டு இருக்கின்றன. எனவே மக்களே இந்த வதந்தியை நம்ப வேண்டாம்.


Click it and Unblock the Notifications