சீனாவில் டாப் 10 பணக்காரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதன்படி பாட்டிலில் அடைக்கப்பட்ட நீர் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்யக்கூடிய நோங்ஃபு ஸ்பிரிங் (Nongfu Spring) நிறுவனத்தின் உரிமையாளர் ஸோங் ஷான்ஷன் (Zhong Shanshan) அந்த நாட்டின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஃபோர்ப்ஸ் தளம் சார்பாக சீனாவின் முதல் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் குளிர்பானங்களை விற்பனை செய்யும் நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனத்தின் நிறுவனர் ஸோங் ஷான்ஷன் இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தை பிடித்திருக்கிறார். அவருடைய மொத்த சொத்து மதிப்பு 50.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.

அதேபோல இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் டென் சென்ட் ஹோல்டிங் (Tencent Holdings) நிறுவனத்தின் தலைவர் மா ஹுவாடெங் (Ma Huateng) ஆவார். டென்செண்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் என்பது சீனாவை சேர்ந்த ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப குழுமமாகும்.
வருவாய் அடிப்படையில் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் மல்டிமீடியா நிறுவனமாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக வீடியோ கேம் துறையில் மிகத் தீவிரமாக செயலாற்றி வருகிறது. டென் சென்ட் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான மா ஹூவாடெங்கின் சொத்து மதிப்பு 46.8 மில்லியன் டாலர்கள் ஆகும்.
ஆன்லைன் வீடியோ கேம்கள் வாயிலாகவும் தன்னுடைய மீடியா நிறுவனங்கள் மூலமாகவும் நடப்பாண்டில் மட்டும் இவரது சொத்து மதிப்பில் கூடுதலாக 14.7 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளதாம்.
இந்த பட்டியலில் சீனாவின் மிகப்பெரிய இணையம் சார்ந்த தொழிலதிபரும் டிக் டாக் செயலி உரிமையாளருமான ஸாங் யெமிங் ( Zhang Yeming ) 45.6 பில்லியன் டாலர்களோடு மூன்றாமிடத்தை பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் இருந்த இவர் இந்த ஆண்டு மூன்றாம் இடத்திற்கு சென்றுள்ளார். இதற்கு காரணம் பல்வேறு நாடுகளிலும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு இவரது வருமானம் சற்றே சரிவை கண்டுள்ளது.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் கோலின் ஹூவாங் ( Colin Huang) .இவர் சீனாவில் பிரபலமடைந்து வரக்கூடிய Pinduoduo ஈகாமர்ஸ் நிறுவன உரிமையாளர். இவரது சொத்து மதிப்பு 43.9 மில்லியன் டாலர்கள் ஆகும்.
இந்த பட்டியலில் புகழ்பெற்ற ஜாக் மா எட்டாவது இடத்தில் இருக்கிறார். இவருடைய சொத்து மதிப்பு 25.2 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.
ஒட்டுமொத்தமாக சீன பணக்காரர்களின் மொத்த சொத்து மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மதிப்பீட்டை கடந்திருப்பதாக போப்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது சீன பங்குச் சந்தை மந்த நிலையிலிருந்து மீண்டு வந்ததே இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications