வாஷிங்டன், அமெரிக்கா: அமெரிக்காவில் நெருங்கிய நண்பர்களாக இருந்த அதிபர் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் இடையே தற்போது பெரிய அளவிலான மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் டிரம்புக்கு ஆதரவாக பிரச்சார மேற்கொண்ட எலான் மஸ்க் தேர்தல் பிரச்சாரத்திற்காக பல கோடி ரூபாய் நன்கொடையும் வழங்கினார்.
நட்பு முதல் மோதல் வரை: இதனை அடுத்து டொனால்ட் டிரம்ப் தன்னுடைய நிர்வாகத்தில் எலான் மஸ்கிற்கு முக்கிய பொறுப்புகளை கொடுத்தார். அரசு செயல் திறன் துறைக்கு தலைவராக எலான் மஸ்கை நியமனம் செய்தார். அண்மையில் தான் இந்த பதவிக்காலம் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அரசு செலவினங்களை குறைப்பதற்காக தன்னுடைய தலைமையிலான துறையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த நிலையில், அதனை சீர்குலைக்கும் வகையில் வரி மசோதாவை டிரம்ப் நிறைவேற்றி இருப்பதாக எலான் மஸ்க் தன்னுடைய குற்றச்சாட்டை முன்வைத்தார்.

டெஸ்லா பங்கு வீழ்ச்சி:இதனை அடுத்து எலான் மஸ்கிற்கும் டிரம்புக்கும் இடையே கடுமையான வார்த்தை மோதல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மோதலில் சிக்கி சின்னாபின்னமாகி இருக்கிறது டெஸ்லா நிறுவனம். டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. டெஸ்லா நிறுவனம் மின்சார கார்களை விற்பனை செய்து வருகிறது. ஏற்கனவே டெஸ்லா நிறுவனத்தில் வாகன விற்பனைகள் குறைந்து அந்த நிறுவனம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு இருக்கிறது.
ரூ.32 லட்சம் கோடி இழப்பு: இதனிடையே டிரம்பின் புதிய வரி சட்டம் மின்சார வாகனங்களுக்கான சலுகையை ரத்து செய்யும் வகையில் அமைந்துள்ளது டிரம்பும் எலான் மஸ்கின் நிறுவனத்திற்கு வழங்குவதாக இருந்த அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்ய போவதாக அறிவித்தார். இந்த மிரட்டலை தொடர்ந்து அமெரிக்க பங்குச் சந்தையில் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை கண்டன. டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது. இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு 29 சதவீதம் சரிவடைந்தது. அதாவது அதன் சந்தை மூலதன மதிப்பு 380 பில்லியன் டாலர்கள் இந்திய ரூபாய் மதிப்பு 32 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. இது இந்தியாவின் நம்பர் இன் நிறுவனமான ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸின் சந்தை மூலதன மதிப்பான 19 லட்சம் கோடியை விட அதிகம் ஆகும்.
ஒரே நாளில் சரிவு: அமெரிக்கா பங்குச் சந்தையில் ஜூன் 3ஆம் தேதி அன்று டெஸ்லா நிறுவனத்தின் பங்கு மதிப்பு 355 டாலர்களாக இருந்தது டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையிலான மோதல் வலுத்ததை அடுத்து 5ஆம் தேதி அன்று டெஸ்லா நிறுவன பங்கு மதிப்பு 275 டாலர் என சரிவை கண்டது. வெள்ளிக்கிழமை அன்று படிப்படியாக டெஸ்லாவின் பங்கு மதிப்பு உயர்ந்து 295 டாலர் என்ற அளவில் வர்த்தகமாகியது.
தொடர் சரிவில் டெஸ்லா: 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலக அளவில் சந்தை மூலதன அடிப்படையில் எட்டாவது பெரிய நிறுவனமாக இருந்த டெஸ்லா தற்போது பத்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 29 சதவீதம் வரை உயர்வை கண்டன.
இதனை அடுத்து தொடர்ந்து ஏற்றத்திலேயே இருந்த டெஸ்லா நிறுவன பங்குகள் வியாழக்கிழமை அன்று ஒரே நாளில் 14 சதவீதம் சரிவடைந்தது. டெஸ்லா நிறுவன வரலாற்றிலேயே ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு இதுவாகும்.2025ஆம் ஆண்டில் மட்டும் டெஸ்லா நிறுவன பங்கு மதிப்பு 22 சதவீதம் வரை சரிந்து அமெரிக்க பங்குச்சந்தையில் மோசமாக செயல்பட்ட பங்கு என பெயர் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications