வாஷிங்டன்: அமெரிக்காவை சேர்ந்த புகழ்பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 1,000 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்கள் பணி நீக்கத்தை தொடர்ந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அமெரிக்காவின் புகழ் பெற்ற ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தங்களுடைய மென்பொருள் மற்றும் சேவை பிரிவுகளில் இருக்கும் சுமார் 1000 பேரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சில தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டி இருப்பதாகவும், இதன் காரணமாகவே ஊழியர்கள் பணி நீக்கம் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது. டெட்ராய்ட் பகுதியில் உள்ள ஜெனரல் மோட்டார்ஸின் டெக் கேம்பஸில் சுமார் 600 பேர் வேலையில் இருந்து நீக்கப்படுகின்றனர். பெரும்பாலும் அமெரிக்காவை சேர்ந்த ஊழியர்களே இதன் மூலம் பாதிக்கப்படுவர் என தெரிகிறது.

முன்னதாக ஜெனரல் மோட்டார்ஸ் மென்பொருள் மற்றும் சேவைகள் பிரிவுக்கு செயல்பாட்டு தலைவராக மைக் ஆபட் பதவி வகித்து வந்தார். ஆப்பிள் நிறுவன ஊழியரான ஆபட் 2023 ஆம் ஆண்டு ஜெனரல் மோட்டார்ஸ் மென்பொருள் துறைக்கு தலைவராக நியமனம் செய்யப்பட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் திடீரென பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனை அடுத்து தான் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் நீக்கம் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை தற்போது மின்சார வாகன உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகிறது. முன்னதாக 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் சுமார் 5 ஆயிரம் ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியது.
சர்வதேச அளவில் தொழில்நுட்ப துறையில் வேலைநீக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. ஐடி துறையை பொறுத்தவரை தற்போது பொருளாதார சவால்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள், ஏஐ தொழில்நுட்பத்தால் வந்துள்ள மாற்றங்கள் என பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருவதால் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. Layoffs.fyi என்ற தளம் வெளியிட்டுள்ள தகவலின் படி, நடப்பாண்டில் மட்டும் 397 நிறுவனங்கள் 1, 30,482 ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவிலும் இந்த பணி நீக்கம் தொடர்கிறது. அன்அகாடமி நிறுவனம் 250 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. அதேபோல வே கூல் நிறுவனம் 200 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 42,000 பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications