ஜெர்மனி நாட்டை சேர்ந்த பிரபல சிப் தயாரிப்பு நிறுவனமான இன்பைனான் (Infineon) 1400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்பைனான் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஜோசென் ஹேண்ட்பெக் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு வருமானம் எதிர்பார்த்ததை விட குறைவாக இருந்த நிலையில் இந்த பணிநீக்கம் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது தெரிய வந்துள்ளது.
நடப்பாண்டில் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்த வண்ணம் உள்ளன. ஜூலை 31ஆம் தேதி வரை சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நடப்பு ஆண்டில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல மிகப்பெரிய சாஃப்ட்வேர் நிறுவனமான யுகேஜி நிறுவனம் 2200 ஊழியர்களை பணியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது, டைசன் என்ற நிறுவனமும் 1000 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டது.

சில தினங்களுக்கு முன்பு கூடிய இன்டெல் நிறுவனம் 1500 பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்தது. இன்டெல் நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து மொத்த ஊழியர்களில் 15% பேரை வேலையில் இருந்து நீக்கும் முடிவினை எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
இன்டெல் இந்த அறிவிப்பை வெளியிட்ட சில தினங்களிலேயே இன்பைனான் நிறுவனம் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது. இன்பைனான் நிறுவனத்தில் சர்வதேச அளவில் 58,600 பேர் வேலை செய்கின்றனர்.
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரைவிலான காலாண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 3.702 பில்லியன் யூரோக்களாகும். இது எதிர்பார்த்ததை விட 3.8 பில்லியன் யூரோக்கள் குறைந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் வருமானம் 9 சதவீதம் குறைந்துள்ளதாம்.
மேலும் நிறுவனத்தின் நிகர லாபமும் 447 மில்லியன் யூரோவை எட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 403 மில்லியன் யூரோக்கள் மட்டுமே லாபமாக ஈட்டியுள்ளது. பொருளாதார மந்த நிலை மற்றும் தொழில்துறை தேக்கம் ஆகியவை காரணமாக வருமானம் குறைவதாக தெரிவிக்கும் ஹேண்ட்பெக் சிக்கன நடவடிக்கையாக உலக அளவில் தங்களுடைய பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறினார்.இதன்படி 1400 பேரை வேலையில் இருந்து நீக்க போவதாக கூறியுள்ளார்.
மேலும் 1400 ஊழியர்களை குறைந்த தொழிலாளர் செலவு கொண்ட நாடுகளுக்கு இடம் மாற்றம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவிலும் அன் அகாடமி, கூ சமூக வலைதளம், ரேஷ்மண்டி, வே கூல் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications