அமெரிக்கா: கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தங்களின் செயற்கை நுண்ணறிவு செயலியான ஜெமினி ஏஐ ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளில் ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்திருக்கிறார்.
சர்வதேச அளவில் ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அடிப்படையிலான சாட் பாட் செயலிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. சாட்ஜிபிடி , கூகுளின் ஜெமினி, மெடா ஏஐ ஆகியவை இந்த பிரிவில் முதலிடத்தை பிடிக்க முயற்சித்து வருகின்றன. இந்த நிலையில் போட்டியை எதிர்கொள்வதற்காக கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துடன் கை கோர்க்க இருக்கிறது.

கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை தங்களின் ஜெமினி சாட் பாட் செயலி ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளோடு ஒருங்கிணைப்பதற்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்து இருக்கிறார். அமெரிக்க அரசு கூகுள் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் ஆஜரான போது சுந்தர் பிச்சை இந்த தகவலை தெரிவித்தார்.
அமெரிக்க அரசின் நிதித்துறை பிரிவு வழக்கறிஞர் ஜெமினி ஏஐ ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளோடு இணைக்கும் திட்டம் இருக்கிறதா என கேட்டதற்கு சுந்தர் பிச்சை ஆம் என பதில் அளித்து இருக்கிறார். இதன் மூலம் ஆப்பிள் நிறுவன கருவிகளோடு ஜெமினி ஏஐ சாட் பாட் ஒருங்கிணைக்கப்படுகிறது என்ற தகவல் முதன்முறையாக பொதுவெளியில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டு ஜெமினி ஏஐ ஆப்பிள் கருவிகளுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டால் ஜெமினி ஏஐ பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
குறிப்பாக ஐபோன் பயன்படுத்தும் அனைவருமே ஜெமினி ஏஐ செயலியை பயன்படுத்துவார்கள். ஜெமினி ஏஐ செயலியை ஆப்பிள் நிறுவனத்தின் கருவிகளோடு ஒருங்கிணைப்பது தொடர்பாக கடந்த ஆண்டிலிருந்து சுந்தர் பிச்சையும் ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என டிம் குக்கும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலம் காலமாகவே கூகுள் நிறுவனத்திற்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கும் இடையே நல்ல உறவுமுறை இருந்தது கிடையாது. 2007ஆம் ஆண்டில் தான் ஆப்பிள் ஐபோன்களில் கூகுள் அடிப்படை தேடுபொறியாக இணைக்கப்பட்டது. இதற்காக கூகுள் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்துக்கு பல லட்சம் கோடிகளை இதுவரை செலுத்தி இருக்கிறது. பல்வேறு பிரிவுகளிலும் போட்டி போட்டுக் கொண்டிருந்த இந்த நிறுவனங்கள் தற்போது ஏஐ தொழில்நுட்பத்தால் இணைந்துள்ளன.
வரும் ஜூன் மாதம் ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் இடையிலான இந்த ஒப்பந்தம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications