சான் பிரான்சிஸ்கோ, அமெரிக்கா: கூகுள் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு பிரிவில் பணிபுரியும் ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரமாவது வேலை செய்ய வேண்டும் என கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே கடுமையான போட்டி எழுந்துள்ளது. ஏற்கனவே கூகுள் நிறுவனம் சாட் ஜிபிடியின் போட்டியை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வரும் நிலையில் சீனாவின் டீப்சீக் செயலி இந்த போட்டியை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சூழலில் போட்டியை எதிர்கொள்ள ஊழியர்கள் கூடுதல் நேரம் உழைக்க வேண்டும் என கூகுள் தலைமை கேட்டு கொண்டுள்ளது.

கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் கூகுளின் Artificial General Intelligence டீமில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வாரத்திற்கு 60 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக செர்ஜி பிரின், ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் கூகுளின் ஏஐ ப்ராஜெக்ட் மற்றும் ஜெமினி உள்ளிட்டவற்றில் பணியாற்றக்கூடிய ஊழியர்கள் வாரத்திற்கு 60 மணி நேரம் கட்டாயம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பிரிவில் இருக்கும் போட்டியை நாம் எதிர் கொள்ள வேண்டும் என்றால் கூடுதல் நேரம் வேலை செய்தாக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். பல்வேறு ஊழியர்களும் 60 மணி நேரங்களுக்கும் குறைவாகவே வேலை செய்கிறார்கள் , இவர்கள் சரியாக செயல்படாதது மட்டுமில்லாமல் கடினமாக உழைக்கும் நபர்களுக்கும் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றனர் என மின்னஞ்சலில் குறிப்பிட்டு இருப்பதாக ஃபார்ச்சூன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.
மேலும் ஊழியர்கள் தங்களுடைய கோடிங் உள்ளிட்ட வேலைகளுக்காக ஏஐ தொழில்நுட்பத்தையே பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். 60 மணி நேரத்திற்கு மேல் யாரும் வேலை செய்ய வேண்டாம் அது உங்களை சோர்வடைய செய்துவிடும் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் பொதுவாக நிறுவனங்கள் வாரத்திற்கு 40 மணி நேரங்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என ஊழியர்களை அறிவுறுத்துகின்றன. ஆனால் அதைத் தாண்டி கூடுதலாக 20 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என இவர் கூறியுள்ளார்.
Artificial General Intelligence தொழில்நுட்பத்தில் கூகுள் மிக தீவிரமாக ஆய்வு நடத்தி வருகிறது. அதாவது மனிதர்களை விட திறன் கொண்டதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும் என சொல்லப்படுகிறது. எனவே தான் ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications