ஒரு நாடு என்பது எல்லைகளால் மட்டும் அறியப்படுவது அல்ல. அங்குள்ள மக்கள், அவர்களின் கலாச்சாரம், பண்பு, மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு போன்ற எண்ணற்ற காரணிகள் ஒரு நாட்டை சர்வதேச அரங்கில் அடையாளப்படுத்துகின்றன.
சில பல காரணிகளால் ஒரு நாடு இரண்டாக உடைவது காலங்கள் தோறும் நடைபெற்று வருகின்றது. இருப்பினும், இரண்டாக உடைந்த நாடு சர்வதேச நாடுகளின் பார்வையில் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பது மிகவும் முக்கியம்.
வடிவேலுவின் பாணியில் சொல்வதானால், நான் ஒரு ரெளடி என்பதை நான் மட்டும் சொன்னால் போதாது. இந்தச் சமூகமும் அதை அங்கீகரிக்க வேண்டும்.
பிரச்சனைகளின் மையப்புள்ளி
சீனா, தைவான் தன்னை விட்டு பிரிந்து சென்ற ஒரு பகுதி என்றே கூறி வருகின்றது. அதோடு தேவைப்பட்டால் ராணுவ நடவடிக்கை மூலம் தைவான் ஒருங்கிணைந்த சீனாவின் ஒரு பகுதியாக இணைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 1949 இல் சீனாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போருக்கு பிறகு இரு தரப்பும் தனித்தனியே பிரிந்து சென்றன. அதிலிருந்து இந்த இரு நாடுகளும் பல்வேறு முட்டல் மற்றும் மோதல்களைச் சந்தித்து வருகின்றன. சீனா தன்னுடைய ஒரு சீனா கொள்கையின் கீழ், சாம, பேத, தான, மற்றும் தண்ட வழிகளைப் பயன்படுத்தி, தைவானை தன்னுடன் இணைத்துக் கொள்ள பெரிதும் முயன்று வருகின்றது.
அங்கீகாரம் மிகவும் முக்கியம்
சீனாவில் இருந்து பல்வேறு அரசியல் காரணங்களால் பிரிந்த தைவான், தன்னை ஒரு நாடாகப் பிரகடணப்படுத்திக் கொண்டது. எனினும், அதை மிகச் சில நாடுகள் மட்டுமே அங்கீகரித்தன. தைவானை ஒரு நாடாக அங்கீகரித்ததில் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸும் ஒன்று. எனினும் ஹோண்டுராஸ், கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவானுடனான தன்னுடைய ராஜதந்திர உறவுகளை முறித்துக் கொள்வதாக அறிவித்தது. அதோடு மட்டுமல்ல, சீனாவுடன் தன்னுடைய புதிய உறவை ஆரம்பித்துள்ளது.
ஒரே ஒரு சீனா மட்டுமே
சீனாவுடன் ராஜதந்திர உறவை ஆரம்பிக்கும் பொழுது ஹோண்டுராஸ், "உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே இருக்கின்றது. ஹோண்டுராஸ் அந்த ஒரு சீனா இருப்பதை மட்டுமே அங்கீகரிக்கிறது" என்று கூறியது. இதன் காரணமாக தைவானை அங்கீகரித்துள்ள நாடுகளின் எண்ணிக்கை 13 ஆக குறைந்துள்ளது.
ராஜதந்திரம் வீணாகப் போகுமோ?
இந்த அடி தைவான் மீது சீனாவின் பிடி மிக பலமாக இறுகுகின்றது என்பதை உணர்த்துவதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனா கடந்த ஆண்டு தைவானைச் சுற்றி பல்வேறு ராணுவ ஒத்திகைகள் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டது. சீனாவின் இந்த ராணுவ அச்சுறுத்தல் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வறுகின்றது. இப்பொழுது ராஜதந்திர நடவடிக்கைகளின் மூலம் தைவானை தனிமைப்படுத்தும் முயற்சியிலும் வெற்றி பெறத் தொடங்கி இருக்கின்றது.
கூட்டறிக்கை
சீன அரச பிரதிநிதியும், வெளியுறவு அமைச்சருமான Qin Gang மற்றும் ஹோண்டுராஸ் நாட்டின் பிரதிநிதி Eduardo Enrique Reina ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை பெய்ஜிங்கில் உள்ள Diaoyutai ஸ்டேட் விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் ஒரு கூட்டு அறிக்கையிலும் கையெழுத்திட்டனர்.
சீனாவும் ஹோண்டுராஸும்
சீனாவும் ஹோண்டுராஸும், "ஒருவரையொருவர் அங்கீகரிக்கவும், தூதரக மட்டத்தில் உறவுகளை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளன. இந்த அறிக்கை கையொப்பமிட்ட தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது" என்று இரு நாடுகளும் வெளியிட்ட அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னர், இந்த இரு நாடுகளும், தனித்தனியே அறிக்கைகளை வெளியிட்டனர்.
ஹோண்டுராஸ் - ஒரு புதிய விசுவாசி
"உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. அதை மட்டுமே ஹோண்டுராஸ் அரசு அங்கீகரிக்கிறது. சீன மக்கள் குடியரசின் அரசானது சீனாவை உலகளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே சட்டபூர்வமான அரசாக உள்ளது. தைவான் என்பது ஒருங்கிணைந்த சீனப் பிரதேசத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். இன்றைய நிலவரப்படி, ஹோண்டுஸ் அரசு தைவானுடன் எந்த ஒரு உத்தியோகபூர்வமான உறவு அல்லது தொடர்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே, ஹோண்டுராஸ் அரசு, தைவானுடனான அனைத்து தூதரக உறவுகளைத் துண்டித்துக்கொள்வதாக முடிவெடுத்து அதனை தைவானுக்கும் தெரிவித்துள்ளது" என்று ஹோண்டுராஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் பாராட்டு
"... ஹோண்டுராஸ் உலகில் உள்ள 181 நாடுகளுடன் தோள் சேர்ந்து ஒரு அணியில் நிற்கின்றது. அதோடு அந்த நாடு, ஒரே சீனா கொள்கையை அங்கீகரித்து, கடைப்பிடிக்கவும் செய்கின்றது. மேலும் ஹோண்டுராஸ் தைவானுடனான அனைத்து ராஜதந்திர உறவுகளையும் துண்டிக்க முடிவு செய்துள்ளது", என்று சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ட்விட்டரில் ஆரம்பம்
ஹொண்டுராஸ் அதிபர் சியாமரோ காஸ்ட்ரோ இந்த மாத தொடக்கத்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அதில் தான் சீனாவுடன் பேச்சுவார்த்தைகளை தொடங்க வெளியுறவு அமைச்சர் எட்வர்டோ ரெய்னாவுக்கு அறிவுறுத்தியதாக தெரிவித்திருந்தார்.
தைவான் பதிலடி
ஹோண்டுராஸ் அதிபரின் ட்வீடிற்கு தைவானும் பதிலடி கொடுத்தது. தைவான் ஹோண்டுராஸ் நாட்டிற்காக தன்னுடைய தூதரை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதோடு மட்டுமல்ல, ஹோண்டுராஸ், சீனாவின் பொறியில் விழுந்து விடக் கூடாது எனவும் அறிவுறுத்தியது.
தைவான் அறிவிப்பு
இதனை தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ, "தைவான் தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாப்பதற்காக ஹோண்டுராஸுடனான தனது உறவை ஞாயிற்றுக்கிழமை முடித்துக்கொள்கின்றது" எனத் தெரிவித்தார்.
தேர்தல் படுத்தும் பாடு
தைபேயில் இருந்து அசோசியேட்டட் பிரஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது."காஸ்ட்ரோவும் அவரது குழுவும் எப்போதும் சீனாவைப் பற்றி ஒரு மித மிஞ்சிய கற்பனைகளை கொண்டிருக்கின்றனர். 2021 இல் ஹோண்டுராஸில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பு உறவுகளை மாற்றுவது குறித்த பிரச்சினையை அவர் எழுப்பினார். தைவான் மற்றும் ஹோண்டுராஸ் இடையேயான உறவுகள் ஒரு காலத்தில் நிலையானதாக இருந்தன. ஆனால் சீனாவில் வலையில் விழுந்த ஹோண்டுராஸ் தைவானுடனான தன்னுடைய உறவை துண்டித்துக் கொள்ள விரும்புகின்றது." என தைவான் வெளியுறவு அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்ததாக அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.
அமெரிக்காவின் விளையாட்டு
தைவானிடம் இப்போது 13 நாடுகள் மட்டுமே முறையான ராஜ தந்திர உறவுகளை வைத்துள்ளன. இந்தியா உட்பட பெரும்பாலான நாடுகள் இந்த நாட்டுடன் முறைசாரா உறவுகளைப் பேணுகின்றன. சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஏற்படும் உரசலுக்கான மையப் புள்ளியாக தைவான் உள்ளது. தைவானுக்கு அமெரிக்க ஆயுதங்களை விற்பதை சீனா விரும்பவில்லை. தேவையில்லாமல் அமெரிக்க சீனாவின் உள் விவகாரங்களில் தலையிடுவதாக சீனா கருதுகின்றது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications