டெல்லி: ஏப்ரல் 2ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருக்கிறார். இதனால் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பிறகு சர்வதேச வர்த்தகம் என்ன ஆகும் என்ற கேள்வி பலர் மத்தியிலும் எழுந்துள்ளது.
குறிப்பாக இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவு என்ன நிலைக்கு செல்லும் என நிபுணர்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதனிடையே அண்மையில் வெளியான எம்கே ஆய்வறிக்கையில் அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 10% என்ற அளவில் இறக்குமதி வரியை அதிகரித்தால் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மதிப்பில் இந்தியா 6 பில்லியன் டாலர்கள் வரை இழப்பை சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளது. அதாவது இந்திய ஜிடிபியில் இது 0.16 சதவீதம் ஆகும்.

டிரம்ப் நிர்வாகம் இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 25 சதவீதமாக உயர்த்தினால் இந்த பாதிப்பு மேலும் அதிகரிக்கும். இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்களின் மதிப்பில் 31 பில்லியன் டாலர்கள் வரை இழக்க கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நவரத்தின கற்கள் மற்றும் நகைகள் ஏற்றுமதி, ஆடை அணிகலன்கள் ஏற்றுமதி இந்த வரி நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்படும் துறைகளாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கார்களை இறக்குமதி செய்வதற்கான வரியை ஏப்ரல் 3ஆம் தேதியிலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்க இருக்கிறது. எனவே இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட வாகனங்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் இதில் பெரிய அளவு பாதிக்கப்படும். அதேபோல வாகனங்களுக்கான பாகங்களை ஏற்றுமதி செய்வதிலும் சில சிக்கல்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் இருந்து ஆண்டு தோறும் சராசரியாக 6.79 பில்லியன் மதிப்பிலான கார் உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இதனிடையே ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படக்கூடிய 87 சதவீத பொருட்கள் டிரம்ப் நிர்வாகத்தின் போட்டி வரி நடவடிக்கையால் பாதிக்கப்படும் என தெரிவிக்கிறது. இவற்றின் மதிப்பு 66 பில்லியன் டாலர்கள் என கூறுகிறது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காகத்தான் மத்திய அரசு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படக்கூடிய பெரும்பான்மையான பொருட்களின் வரியை குறைப்பதற்கு முடிவு செய்துள்ளதாம். இதன் மூலம் இந்தியா 23 பில்லியன் மதிப்பிலான டாலர்களை இழக்க தயாராகி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன .
சீனா ,மெக்சிகோ , கனடா ஆகிய நாடுகளோடு ஏற்கனவே டிரம்ப் வர்த்தகப் போரை தொடங்கி இருப்பதால் குறிப்பிட்ட சில துறைகளில் இந்தியா அமெரிக்காவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்துவதற்கான வாய்ப்பாக இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 190 பில்லியன் டாலர்களாக இருக்கிறது 2030ல் இதனை 500 பில்லியன் டாலர்களாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
இந்த காலகட்டத்தை அதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளனர். நிதி ஆயோக்கின் பிரவாகர் சாஹோ அமெரிக்காவின் வரி நடவடிக்கையால் இந்தியாவிற்கு பெருமளவில் பாதிப்பு இருக்காது என கூறியுள்ளார். ஏனெனில் மெக்சிகோ ,சீனா , கனடா ஆகிய நாடுகளின் 50 சதவீத ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் செல்கிறது. ஆனால் இந்தியா அப்படி கிடையாது என கூறி இருக்கிறார்.


Click it and Unblock the Notifications