கத்தோலிக்க திருச்சபையின் தலைமை மத குருவாக ராபர்ட் பிரான்சிஸ் ப்ரெவோஸ்ட் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உடல்நல குறைவு காரணமாக கத்தோலிக்க திருச்சபையின் 266ஆவது தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த மாதம் 21ஆம் தேதி காலமானார். கத்தோலிக்க திருச்சபையின் மரபு படி அடுத்த போப்பை தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெற்றது. இதன் அடிப்படையில் வாடிகனில் சிஸ்டைன் தேவாலயத்தில் இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 71 நாடுகளை சேர்ந்த 133 கார்டினல்கள் பங்கேற்றனர்.

இதில் அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் புதிய போப்பாக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 69 வயதாக கூடிய இவர் இனி 14 ஆம் லியோ என்ற பெயரால் அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க ஒருவர் போப்பாக தேர்வு செய்யப்படுவது இதுவே முதன்முறை என சொல்லப்படுகிறது. இவருக்கு போப் பதவியோடு சேர்த்து மாதந்தோறும் 33, 800 டாலர்கள் சம்பளமாக கிடைக்கும். இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் 28. 87 இலட்சம் ரூபாய் ஆகும்.
இதன் மூலம் ஓர் ஆண்டுக்கு இவர் சுமார் நான்கு லட்சத்திற்கும் அதிகமான டாலர்களை சம்பளமாக பெறுகிறார் . இதற்கு முன்பு போப்பாக இருந்த போப் பிரான்சிஸ் தனக்கு கிடைத்த சம்பளத்தை ஏற்கவில்லை. அந்த சம்பளத் தொகையை பல்வேறு நற்பணிகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் வழங்கினார். இந்த சூழலில் 14ஆம் லியோ தன்னுடைய சம்பளத்தை முழுமையாக தனக்கென ஏற்றுக் கொள்ளும்பட்சத்தில் உலகிலேயே அதிக சம்பளம் பெறக்கூடிய ஒரு தலைவர் என்ற பெருமை இவருக்கு கிடைக்கும்.
உதாரணமாக அமெரிக்க அதிபருக்கு ஆண்டுக்கு 4 லட்சம் டாலர்கள் சம்பளமும், 1.70 லட்சம் டாலர்களுக்கு பிற கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. எனவே அமெரிக்க அதிபருக்கு அடுத்தபடியாக அதிக வருமானம் ஈட்டும் தலைவராக இவர் இருக்கிறார். சம்பளம் தவிர்த்து இந்த பதவியில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்படுகின்றன. வாடிகனில் இருக்கும் மிகப்பெரிய மாளிகையில் இலவசமான வீடு , உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் பெறலாம்.
கார்கள், வெளிநாட்டு பயணங்களுக்கான டிக்கெட், பாதுகாப்பு, மருத்துவ தேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் தேவாலய நிர்வாகமே பார்த்துக் கொள்கிறது. மேலும் போப் ஓய்வு பெற விரும்பினால் ஓய்வு காலத்தில் அவருக்கு மாதம் 3 ஆயிரத்து 300 டாலர்கள் அதாவது 2 லட்சம் ரூபாய் ஓய்வூதியமாக கிடைக்கும்.


Click it and Unblock the Notifications