உலகளவில் ஏஐ மற்றும் ரோபோ ஆய்வுகள் ஒவ்வொரு நாளும் புது புது மைல்கற்களை எட்டுகின்றன. குறிப்பாக மனித வடிவிலான Humanoid ரோபோக்களுக்கு இப்போது டிமாண்ட் அதிகமாக இருகிறதாம். அதுவும் குறிப்பிட்ட சில துறைகள் தான் அதிகமாக இவ்வகை ரோப்போக்களை வாங்குகின்றன.
ரோபோக்களின் பல வகை உண்டு, அதில் ஒரு வகை தான் Humanoid ரோபோ. மனிதனை போன்ற தோற்றத்தை கொண்டிருக்க வேண்டும் மற்றும் மனிதர்களுக்காக வடிவமைக்கப்பட்ட சூழலில் தன்னிச்சையாக இயங்கக்கூடியதாக இருக்க வேண்டும் என்பது தான் இதற்கான வரையறை. நடிகர் ரஜினியின் எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோவை இதற்கு உதாரணமாக கூறலாம்.

2025ஆம் ஆண்டில் மட்டும் உலகளவில் தோராயமாக 7,000 மனித உருவ ரோபோக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. சர்வதேச ரோபோடிக்ஸ் சம்மேளனம் வெளியிட்டுள்ள தரவுகளில் இந்த தகவல் வெளியாகி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட மனித வடிவ ரோபோக்களில் பல ரோபோக்கள் நேரடி உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப்படவில்லை. மாறாக, ஆராய்ச்சி நிறுவனங்களும், ஏஐ மாடல்களை மேம்படுத்துவதற்கான தரவுகளை சேகரிக்கும் நிறுவனங்களும்தான் அதிகம் வாங்கியுள்ளன.
இந்த அதிநவீன ரோபோக்களை வாங்குபவர்களில் முதலிடத்தில் இருப்பது வாகன தயாரிப்பு நிறுவனங்கள்தான். குறிப்பாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மனித வடிவ ரோபோக்களை வாங்கி குவிக்கின்றனர். முதல் கட்டமாக தங்கள் ஆலைகளில் இந்த ரோபோக்களை வைத்து சோதனை ஓட்டங்களை நடத்தி வருகின்றன. ஆலைகளில் வேலை செய்வது மட்டுமில்லாமல் வாகனங்களின் சோதனை போதும் இவை பயன்படுத்தப்படுகின்றன.
உலகிலுள்ள ஒட்டுமொத்த ரோபோக்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது மனித வடிவ ரோபோக்களின் எண்ணிக்கை மிக குறைவு தான். ஆனால் அண்மை காலமாக இதற்கான டிமாண்ட் அதிகமாக உள்ளதாம். ஏனெனில் 2024ஆம் ஆண்டில் வெறும் 2000 மாக இருந்த மனித வடிவ ரோபோக்களின் விற்பனை 2025இல் 7000மாக உயர்ந்துள்ளது. எனவே இனி வரும் ஆண்டுகளில் இதன் விற்பனையும் டிமாண்டும் அதிகமாகும் என்றே சொல்லப்படுகிறது.
வீடு, மருத்துவமனை, ஆலைகளில் எல்லாம் படிப்படியாக உதவியாளர் போன்ற பணிகளில் ஏஐ திறன் கொண்ட ரோபோக்கள் பய்ன்பாடு அதிகமாகும் என சொல்லப்படுகிறது. பேங்க் ஆஃப் அமெரிக்கா குளோபல் ரிசர்ச் மதிப்பீட்டின்படி 2030-க்குள் மனித வடிவ ரோபோக்கள் உருவாக்கம் மற்றும் விற்பனை 12 லட்சத்தை எட்டும் எனகிறது. அதாவது இவ்வகை ரோபோக்களுக்கான தேவையும் இது சார்ந்த தொழிலும் மேம்படும் என கணித்துள்ளது.
இவ்வாறு மனித வடிவ ரோப்போக்களை உருவாக்கி விற்பனை செய்வதில் சீனா தான் முதலிடத்தில் உள்ளது. இந்த சந்தையில் கிட்டதட்ட 95% பங்களிப்பை சீனாவே கொண்டுள்ளது. என்னதான் ரோபோ ஆய்வுகளில் அமெரிக்கா முன்னிலை இருந்தாலும் அதனை ஒரு தயாரிப்பாக மாற்றி விற்பனை செய்வதில் சீனா தான் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. தற்போது எப்படி செமி கண்டக்டர் துறை வளர்கிறதோ அதே போல விரைவில் இவ்வகை ரோபோ உற்பத்திக்கான தேவையும் வளர்ச்சி அடையும் என கூறும் நிபுணர்கள் எதிர்காலத்தில் இந்த துறையில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications


