ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல்வேறு துறைகளிலும் கால் பதித்து மனிதர்களின் வேலைவாய்ப்பை பறித்து வருவதாக தொடர்ந்து நாம் செய்திகளில் படித்து வருகிறோம். இந்த சூழலில் HR (Human resources) எனப்படும் மனித வளத்துறை வேலைகளை கூட தற்போது ஏஐ தொழில்நுட்பமே மேற்கொள்வது தெரிய வந்திருக்கிறது.
ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் கிருஷ்ணா, தி வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்துள்ள பேட்டியில் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இதன்படி ஐபிஎம் நிறுவனம் தற்போது தங்கள் நிறுவனத்தில் ஹெச்ஆர் வேலையில் இருந்த பலரை தூக்கி விட்டு அதற்கு பதிலாக ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

ஏஐ ஏஜெண்டுகள் முழுக்க முழுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் செயல்படக்கூடியவை. இந்த ஏஐ தொழில்நுட்பம் மனித வளத்தை தேர்வு செய்வது, அவர்களை பற்றிய தகவல்களை ஆய்வு செய்வது மற்றும் ஹெச்ஆர் பணியின் அனைத்து அடிப்படை வேலைகளையும் செய்து விடுகிறது. இதன் காரணமாக தங்களுடைய நிறுவனத்தில் மனிதவளத்துறை மேம்பட்டு இருப்பதாக அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை கொண்டு ஹெச்ஆர் பணிகளை மேற்கொள்வதன் மூலம் தங்கள் நிறுவனத்தில் மொத்த வேலை வாய்ப்பு உண்மையிலேயே அதிகரித்துள்ளது எனக் கூறியிருக்கும் அரவிந்த் கிருஷ்ணா வழக்கமான பணிகளை தானியங்கு முறைக்கு மாற்றுவதால் ஐபிஎம் நிறுவனம் பெருமளவில் சேமித்திருப்பதாக கூறுகிறார்.அந்த பணத்தை எங்கெல்லாம் மனிதவளம் தேவைப்படுகிறதோ அந்த பிரிவுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
மென்பொருள் பொறியாளர்கள், விற்பனை மற்றும் மார்க்கெட்டிங் உள்ளிட்ட பிரிவுகளில் எல்லாம் மனித வளம் தேவைப்படுகிறது, சரியான முறையில் சிந்தித்து தீர்வு காண வேண்டிய இடத்தில் மனிதர்களால் மட்டுமே செயல்பட முடியும். எனவே நாங்கள் ஹெச்ஆர் போன்ற ஒரே மாதிரியாக செய்ய வேண்டிய வேலைகளில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்து அந்த சம்பளத்தை மற்ற துறைகளுக்கான மனித வளத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறோம் எனக் கூறியிருக்கிறார்.
ஐபிஎம் நிறுவனம் மனிதவளத்துறை பணிகளை ஏஐ தொழில்நுட்பம் மூலம் தானியங்கு முறைக்கு மாற்றி இருப்பது குறித்து முதன்முறையாக வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கையால் ஐபிஎம் நிறுவனத்தில் பெரிய அளவு பாதிப்பு இல்லை என அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். தங்களுடைய நிறுவனத்தின் நிதி நிலைமை மிகக் குறைந்த அளவு தாக்கத்தையே கண்டிருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.
ஏற்கனவே மெடா, கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் கோடிங் பணிகளை எல்லாம் ஏஐ தொழில்நுட்பம் மூலமே மேற்கொள்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில் ஹெச் ஆர் வேலைகளையும் அந்த தொழில்நுட்பம் கையகப்படுத்த தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications