அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்தியிருக்கும் வர்த்தக போர் காரணமாக பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் வட்டி குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் ஐரோப்பிய மத்திய வங்கி தங்களுடைய வட்டி விகிதத்தில் 0.25 அடிப்படை புள்ளிகள் வரை குறைத்து இருக்கிறது.
அமெரிக்கா மற்றும் பிற நாடுகளிடையே நிகழ்ந்து வரும் வர்த்தக மோதல்களே இந்த வட்டிக் குறைப்பு நடவடிக்கைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மத்திய வங்கியை சேர்ந்த தலைவர்கள் இது தொடர்பாக நடத்திய ஆலோசனையில் தொடர்ந்து ஆறாவது முறையாக தங்களுடைய வட்டி விகிதத்தை குறைக்கும் முடிவை எடுத்துள்ளனர். இந்த முறை 0.25 சதவீதம் என வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது ஐரோப்பிய மத்திய வங்கியின் பெஞ்ச் மார்க் டெபாசிட் விகிதம் என்பது 2.25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐரோப்பிய மத்திய வங்கியின் பெஞ்ச் மார்க் டெபாசிட் விகிதம் இந்த அளவிற்கு குறைந்திருப்பது இதுவே முதன்முறையாகும். ஐரோப்பிய வங்கி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பணவீக்க விகிதம் இரண்டு சதவீதமாக இருக்கும் என இலக்கு நிர்ணயம் செய்திருந்தது. தற்போது பணவீக்கம் அந்த பாதையில் தான் பயணிப்பதாக தெரிவித்திருக்கிறது. இருந்தாலும் அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கும் வர்த்தக மோதல்களும் பதட்டங்களும் பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை கருத்தில் கொண்டு வட்டி விகிதத்தை குறைத்திருப்பதாக தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதமே ஐரோப்பிய மத்திய வங்கி மேற்கொண்டு வட்டி விகிதங்களை குறைக்க வேண்டாம் என முடிவு செய்திருந்தது. ஆனால் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் மீண்டும் அவர்களை வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுக்க வைத்துள்ளன. அமெரிக்காவைப் பொறுத்தவரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவித்திருக்கிறது. இது தவிர வாகனங்கள் மற்றும் ஸ்டீல், அலுமினியம் சம்பந்தப்பட்ட பொருட்களுக்கான இறக்குமதி வரி 25 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகள் தங்கள் நாட்டின் நிறுவனங்களையும் நேரடியாக பாதிக்கும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான மத்திய வங்கி கவலை தெரிவித்து இருக்கிறது. மேலும் இது நிதி சார்ந்த நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் பணவீக்கத்தை அதிகரிக்கும் என்றும் கணித்துள்ளது.
எனவே தொழில் நிறுவனங்களுக்கு ஒரு சாதகமான போக்கை ஏற்படுத்தவும் பொருளாதாரத்தை சரியான பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும் தான் வட்டி குறைப்பு நடவடிக்கையை எடுத்திருப்பதாக ஐரோப்பிய மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications