அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் தங்களுடைய சொந்த நாடுகளுக்கு பணத்தை அனுப்பும் போது 5 சதவீத வரி செலுத்தும் வகையிலான புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. இது அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்கள் குறிப்பாக இந்தியாவை சேர்ந்தவர்களுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் புதிய மசோதாவில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவிலிருந்து தங்களுடைய சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பும்போது அதற்கு 5 சதவீத வரி விதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஹெச்1பி விசா மற்றும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இது பொருந்தும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக மாறும்போது அமெரிக்காவில் வசிக்கக்கூடிய லட்சக்கணக்கான இந்தியர்கள் குறிப்பாக வேலைக்காக அமெரிக்காவில் சென்று தங்கி இருக்கக்கூடிய இந்தியர்கள் தாய் நாட்டிற்கு பணம் அனுப்புவதற்கு ஐந்து சதவீத வரியை செலுத்த வேண்டி இருக்கும்.

The One Big Beautiful Bill என்ற பெயரில் இந்த மசோதா அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. மொத்தம் 389 பக்கங்கள் கொண்ட இந்து ஆவணத்தின் 327 ஆவது பக்கத்தில் அமெரிக்காவில் தங்கி இருக்கக்கூடிய வெளிநாட்டவர்கள் தாங்கள் அனுப்பக்கூடிய பணத்தில் 5 சதவீத தொகையை வரியாக செலுத்த வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் இருக்கும் வெளிநாட்டவர்கள் குறைந்தபட்ச தொகை அனுப்பினாலும் சரி அல்லது அதிகபட்ச தொகையை அனுப்பினாலும் சரி அவர்கள் அனுப்பும் வகையில்5 சதவீதத்தை வரியாக செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்கள் பணத்தை பரிமாற்றம் செய்யும் போது அமெரிக்காவிலேயே பிடித்தம் செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து அதிகமான அளவு பணம் அனுப்பப்படக்கூடியது அங்கே வசிக்கும் இந்தியர்கள் தான்.
கடந்த 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல் படி அமெரிக்காவில் வசிக்கும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தனிநபர்கள் 2023-24 ஆம் நிதியாண்டில் 32 பில்லியன் டாலர்களை தாயகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். அமெரிக்காவில் 45 லட்சம் இந்தியர்கள் வசிப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிடும் தகவல் குறிப்பிடுகிறது.
ஒருவேளை இந்த வரி நடைமுறைக்கு வந்திருந்தால் இந்தியர்கள் 1.6 பில்லியன் டாலர்களை ஆண்டுதோறும் அமெரிக்கா அரசுக்கு வரியாக செலுத்த வேண்டியது இருக்கும். இந்த மசோதாவின் மீது இந்த மாதத்திலேயே அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் விவாதம் நடைபெற இருக்கிறது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இது சட்டமாக மாறலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications