ஒரே ஒரு அறிக்கையால் இந்தோனேசியாவை சேர்ந்த பெரும் பணக்காரர் பல ஆயிரம் கோடிகளை இழந்து நிற்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தோனேசியாவின் முன்னணி வணிகத் தலைவர்களுக்கு, உலகளாவிய குறியீட்டு வழங்குநரான MSCI ஒரு பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்தோனேசிய நிறுவனங்களின் பங்குகள் நியாயமான முறையில் மதிப்பிடப்பட்டுள்ளனவா என்பதில் MSCI சந்தேகம் எழுப்பியதாக ப்ளூம்பெர்க் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்தேகம் பல நிறுவனங்களின் மதிப்பை கடுமையாக வீழ்ச்சி அடைய செய்துள்ளது.MSCI வெளியிட்ட சந்தேகத்தால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து பங்குச் சந்தையில் சடசடவென தங்கள் வசம் இருந்த பங்குகளை விற்பனை செய்தனர். இதன் விளைவாக, நாட்டின் முன்னணி கோடீஸ்வரர்களின் ஒட்டுமொத்த செல்வத்தில் சுமார் 22 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது.

இந்த இழப்பினால் மிகவும் பாதிக்கப்பட்டவர் இந்தோனேசியாவின் பணக்காரரான பிரஜோகோ பாங்கெஸ்டு ஆவார். அவருடைய எரிசக்தி மற்றும் சுரங்க நிறுவனங்களின் பங்குகள் கடுமையாகச் சரிந்ததால், அவரது சொத்து மதிப்பு சுமார் 9 பில்லியன் டாலர் குறைந்தது. அதாவது 75000 கோடி ரூபாயை ஒரே நாளில் அவர் இழந்திருக்கிறார். ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, அவரது நிகர சொத்து மதிப்பு தற்போது சுமார் 31 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் அவர் சுமார் 15 பில்லியன் டாலரை இழந்துள்ளார்.
பாங்கெஸ்டு, பரோட்டோ பசிபிக் என்ற எரிசக்தி நிறுவனம் மற்றும் பெட்ரின்டோ ஜயா கிரியாசி என்ற நிலக்கரி, தங்கம் சுரங்க நிறுவனங்களில் பெரும்பான்மைப் பங்குதாரராக உள்ளார். இந்த இரண்டு நிறுவனங்களின் பங்குகளும் ஒரே வர்த்தக அமர்வில் 12% க்கும் அதிகமாகச் சரிந்ததாக அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கிடையில், பாங்கெஸ்டுவின் குடும்ப அலுவலகத்தின் நிர்வாக இயக்குநர் நான்சி கபர்தேல், "MSCI-ன் சமீபத்திய அறிக்கையை வழக்கமான நடைமுறையில் மறுபரிசீலனை செய்து வருகிறோம். சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் ஆக்கபூர்வமாக தொடர்ந்து பேசி வருவோம்" என்று தெரிவித்தார்.
தெளிவற்ற உரிமை கட்டமைப்புகள், நியாயமற்ற அல்லது முறையற்ற வர்த்தக அபாயங்களை அதிகரிக்கக்கூடும் என்று முதலீட்டாளர்கள் கவலைப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பிட்ட ஒரு நபர் அல்லது ஒரு சிறிய குழுவே பெரும்பான்மையான பங்குகளைக் கட்டுப்படுத்தும் நிறுவனங்கள் பற்றிய நீண்டகால கவலைகளையும் MSCI எடுத்துரைத்தது.
MSCI திட்டமிடப்பட்ட சில குறியீட்டு மாற்றங்களை நிறுத்திவைப்பதாக அறிவித்தது. மேலும், மே மாதத்திற்குள் சிக்கல்கள் சரிசெய்யப்படாவிட்டால், மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்தது. இந்த எச்சரிக்கை முதலீட்டாளர்களைக் கலக்கமடையச் செய்தது.
ப்ளூம்பெர்க் பட்டியலில் உள்ள இந்தோனேசிய கோடீஸ்வரர்கள் தங்கள் நிறுவனங்களில் சிறிய அளவிலிருந்து 92.5% வரை பங்குகளை வைத்துள்ளனர். இந்தோனேசியாவில், பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 7.5% பொதுப் பங்குகளை (free float) வைத்திருக்க வேண்டும். தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய பங்குச் சந்தையான இந்தோனேசியா, தனது வெளிப்படுத்தல் மற்றும் அறிக்கையிடல் விதிகளை மேம்படுத்த வேண்டும் என்று முதலீட்டாளர்கள் நீண்டகாலமாகக் கோரி வருகின்றனர்.
பல பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் இறுக்கமாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதில் பொது வர்த்தகத்திற்குச் சிறிய அளவிலான பங்குகள் மட்டுமே கிடைக்கின்றன. இது பெரும்பாலும் திடீர் மற்றும் விளக்க முடியாத விலை ஏற்ற இறக்கங்களுக்கு வழிவகுக்கிறது. இதன் மூலம் சாத்தியமான சந்தைக் கையாளுதல் பற்றிய கவலைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.


Click it and Unblock the Notifications