அமெரிக்கா: அமெரிக்காவை சேர்ந்த இன்டெல் நிறுவனம் தங்களுடைய ஊழியர்களில் 20% பேரை வேலையில் இருந்து நீக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ப்ளூம்பெர்க் நிறுவனம் இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. இன்டெல் நிறுவன செயல்பாடுகளை மறுக்கட்டமைப்பு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 20% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டு இருக்கிறதாம். கடந்த சில ஆண்டுகளாகவே இன்டெல் நிறுவனம் கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இதனால் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு இருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியான லிப் பூ டான் 20% ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறாராம். இவர் பொறுப்பேற்ற ஒரு மாத காலத்தில் நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்வதற்கு முடிவு செய்து இருக்கிறார். நிறுவனத்தின் சிப் உற்பத்தியை பெருமளவு செயற்கை நுண்ணறிவுத் திறன் கொண்டதாக மாற்றுவதற்கு அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதற்கு ஏற்ற வகையில் ஏற்கனவே இருக்கும் ஊழியர்களை குறைத்து விட்டு நவீன தொழில்நுட்பங்கள் தெரிந்த ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு அவர் திட்டமிட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
முன்னதாக தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்ற உடன் ஊழியர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய லிப் பூ டான் , தற்போது இருக்கும் நிதிச் சிக்கல்களை தீர்க்க வேண்டும் என்றால் சில கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டி இருக்கும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் ஊழியர்கள் பணிநீக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. குறிப்பாக தலைமை மட்டத்தில் பல்வேறு மாற்றங்களை இவர் கொண்டு வந்திருப்பதாக கூறப்படுகிறது.
சிப் தயாரிப்பு பிரிவு நேரடியாக இவரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இன்டெல் தங்களுடைய ஊழியர்களில் 15 சதவீதம் பேர் அதாவது 15 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்கியது. தற்போது மீண்டும் 20% ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதற்கு முடிவு செய்துள்ளது.
இன்டெல் நிறுவனம் காலம் காலமாக பர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் டேட்டா சென்டர் பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தது ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த துறையில் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட சிப்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. இன்டெல் நிறுவனம் இதில் தலை தூக்க முடியாமல் தவித்து வருகிறது .அமெரிக்காவை சேர்ந்த என்விடியா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த சிப் துறையில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய நிலையில் தான் இன்டெல் நிறுவனம் தங்கள் நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்து வருகிறது.2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி இன்டெல் நிறுவனத்தில் 1,08,900 ஊழியர்கள் வேலை செய்து வந்தனர்.


Click it and Unblock the Notifications