மோடிஜிக்கு ஆப்பு! உங்களுக்கு தான் இந்த 3 செக் வெச்சிருக்கேன்! பழிவாங்கும் ட்ரம்ப்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனி ஈரானிடம் இருந்து, எந்த ஒரு நாடும், எந்த வர்த்தக கொடுத்தல் வாங்கலும் வைத்துக் கொள்ளக் கூடாது. மீறி வர்த்தக உறவு வைத்துக் கொண்டால் அவர்கள் மீதும் பொருளாதாரத் தடை விதிப்பேன் என 04 நவம்பர் 2018 அன்று கொக்கரித்தது அமெரிக்கா. அது தான் Iran Economic Sanction-ன் முதல் குரல்.

 

இந்த Iran Economic Sanction என்கிற பொருளாதார தடைக்குப் பின்னால் 3 பெரிய அரசியல் இருப்பதை உணர முடிகிறது. 1. ஈரான் முடக்கம் - ஈரானை பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்குவது. 2. சவுதிக்கு சாதகம் - தன் விஸ்வாசி சவுதிக்கு கூடுதலாக எண்ணெய் உற்பத்தி செய்து காசு பார்க்க வைப்பது. 3. அமெரிக்க வியாபாரம் - அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியை உலகம் முழுக்கக் கொஞ்சம் படர விடுவது.

அமெரிக்கா எப்படி தன் மூன்று இலக்குகளையும் அடைந்தது. அதனால் இந்தியா எவ்வளவு சிரமங்களுக்கு உள்ளாகிறது என ஒவ்வொன்றையும் விரிவாக, கொஞ்சம் வரலாற்றோடு பார்ப்போம்.

அதிகரிக்கும் மொபைல் பணபரிவர்த்தனைகள்.. மார்ச் மாதத்தில் ரூ.15,990 கோடி பரிவர்த்தனை.. ஆர்.பி.ஐ

1. ஈரான் முடக்கம்

1. ஈரான் முடக்கம்

கடந்த 2015-ம் ஆண்டு தான் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றியம், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி போன்ற நாடுகள் ஒன்று சேர்ந்து Joint Comprehensive Plan of Action என ஒரு ஒப்பந்தத்தில் ஈரானை கையெழுத்து போட வைக்கிறார்கள். இந்த ஒப்பந்தப் படி ஈரான் அனைத்து சில விஷயங்களை கவனமாக கடை பிடிக்க வேண்டும். மீறினால் பொருளாதாரத் தடை தான்.

சரத்துக்கள்

சரத்துக்கள்

மேலே சொன்ன Joint Comprehensive Plan of Action ஒப்பந்தப் படி 1. தன்னிடம் இருக்கும் செரிவூட்டிய யுரேனியத்தில் 98 சதவிகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். 2. அடுத்த 15 ஆண்டுகளுக்கு தற்போது ஈரானிடம் இருக்கும் யுரேனியத்தின் அளவில் வெறும் 3.67 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே யுரேனியத்தைச் செரிவூட்ட வேண்டும். 3. ஈரானிடம் இருக்கும் கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களின் எண்ணிக்கையை, அடுத்த 13 ஆண்டுகளுக்கு மூன்றில் இரண்டு பங்காக குறைத்துக் கொள்ள வேண்டும். 4. அடுத்த 10 ஆண்டுகளுக்கு யுரேனியத்தைச் செரிவூட்ட முதல் தலைமுறை கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களையே பயன்படுத்த வேண்டும். 5. அடுத்த 15 ஆண்டுகளுக்கு புதிதாக ஈரானில் எந்த ஒரு புதிய கண நீர் ஆலையையும் கட்டக் கூடாது.... இப்படி இன்னும் சில விதிகள் இருக்கின்றன.

கண நீர்
 

கண நீர்

மேலே சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் ஈரான் ஏற்றும் கொண்டு செயல்படுத்த வேண்டும். ஈரானின் செயல்பாட்டை கண்காணிக்க, சர்வதேச அணுசக்தி அமைப்பு தொடர்ந்து ஈரானுக்கு விசிட் அடிக்கும். சர்வதேச அமைப்புகளுக்கு அறிக்கையும் கொடுக்கும். இவைகளை எல்லாம் ஒப்புக் கொண்டால், அமெரிக்கா உட்பட பல நாடுகள் ஏற்கனவே ஈரான் மீது விதித்திருந்த பொருளாதாரத் தடைகள் விலக்கிக் கொள்ளப்படும் என்றார்கள். ஈரான் டீலில் கையெழுத்து போட்டது, சொன்ன படி அத்தனை உலக நாடுகளும், ஈரான் மீதான பொருளாதார தடையை நீக்கினார்கள்.

ட்ரம்ப்

ட்ரம்ப்

எல்லாவற்றையும் ஏற்றுக் கொண்ட ஈரான், ஒபாமா ஆட்சிக் காலத்தில் சந்தோஷமாக அடுத்த வேலையில் இறங்கியது. சிறப்பாக வியாபாரம் பார்க்கத் தொடங்கினார்கள். கச்சா எண்ணெய்ச் சந்தையில் நல்ல முன்னேற்றம் கண்டார்கள் ஈரானியர்கள். ஆனால் 2016-ல் பதவிக்கு வந்த ட்ரம்ப், இந்த Joint Comprehensive Plan of Action ஒப்பந்தத்தையே கேள்விக்குறி ஆக்கிவிட்டார். ஈரான் ஒரு சில பழைய அணு ஆயுதங்களை தங்கள் கூட்டமைப்பு நாடுகளின் கவனத்துக்கு கொண்டு வரவில்லை என கொஞ்சமாக பிரச்னையைக் கிளற ஆரம்பித்தார்கள் அமெரிக்கர்கள்.

3 காரணங்கள்

3 காரணங்கள்

1. அதோடு ஈரான் புதிதாக கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கக் கூடிய Ballistic ஏவுகனைகளைப் பற்றிப் பேசாதது,

2. இன்னும் கொஞ்ச காலத்துக்கு அணு உலை, கேஸ் செண்ட்ரிஃப்யூக்ஸ்களை பயன்படுத்தாமல் இருக்கச் சொன்னதுக்கு சம்மதம் தெரிவிக்காதது,

3. 12 மாதங்களில் ஈரானால் ஒரு அணு குண்டைத் தயாரிக்க முடியும் என்கிற விஷயத்தை ஒப்புக் கொள்ளாமல் இருப்பது

போன்ற விஷயங்களைக் காரணம் காட்டி அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொண்டது .

மற்ற நாடுகள் ஆதரவு

மற்ற நாடுகள் ஆதரவு

அமெரிக்கா பின் வாங்கியதை மற்ற கூட்டமைப்பு நாடுகளும் ஆதரித்தன. சில மாதங்களுக்குப் பிறகு, ஈரானும் Joint Comprehensive Plan of Action ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளை மீறி, யுரேனியத்தை அதிக அளவில் செரிவூட்டத் தொடங்கியது. பிரச்னை முற்றிவிட்டது. உலகமே அமெரிக்காவையும், ஈரானையும் உற்றுப் பார்க்கத் தொடங்கினார்கள். அதுவரை சும்மா இருந்த ரஷ்யா கூட ஈரான் தவறு செய்துவிட்டதாகச் சொல்லத் தொடங்கியது.

பொருளாதாரத் தடை

பொருளாதாரத் தடை

ஈரானுக்கு மரண அடி கொடுக்க வேண்டும், குறிப்பாக பொருளாதார ரீதியாக அடிக்க வேண்டும், என்பதற்காகத் தான், அமெரிக்கா, ஈரானிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என பொருளாதாரத் தடையை நவம்பர் 2018-ல் விதித்தது. மேலும் ஈரானின் அனைத்து அந்நிய நாட்டு வருவாய்களிலும் கை வைப்பேன் எனச் சொல்லாமல் சொல்கிறது. ஈரானைக் கொல்லாமல் கொல்கிறது அமெரிக்கா. சரி எண்ணெய் அரசியலுக்கு வருவோம். இதில் இந்தியா, சீனா போன்ற பெரிய ஆசியப் பொருளாதாரங்கள் பெரிய அளவில் அடி வாங்கின.

இந்தியாவுக்கு அடி

இந்தியாவுக்கு அடி

இந்தியாவின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர் ஈரான் தான். ஈரானிடம் டாலரில் தான் கச்சா எண்ணெய்க்கான பணத்தைக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. இந்திய ரூபாயிலேயே கொடுக்கலாம். அதனால் இந்தியாவுக்கு ஒரு கணிசமான அந்நிய செலாவணித் தொகை மிச்சமானது. அதோடு கச்சா எண்ணெய்க்கான பணத்தை 60 நாட்கள் கழித்துக் கொடுத்தால் போதும். இதுவே மற்ற நாடுகளிடம் வாங்கினால் 30 - 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டி இருக்கும்.

ஈரான் பலம்

ஈரான் பலம்

உலகின் மொத்த எண்ணெய் உற்பத்தியில், நாள் ஒன்றுக்கு ஈரானில் இருந்து மட்டும் 38 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் வந்து கொண்டிருந்ததாம். இது மொத்த உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் சுமார் ஐந்து சதவிகிதம். இந்த ஐந்து சதவிகிதத்தை வேறு ஒரு நாடு உற்பத்தி செய்துவிட்டால் ஈரான் பிரச்னை ஓவர் என்றது அமெரிக்கா. ஆனால் அதை இன்னும் கொஞ்சம் விரிவாக யோசித்தது.

சப்ளை வர வேண்டும்

சப்ளை வர வேண்டும்

சரி சர்வதேச அளவில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடை வெற்றி பெற வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும்..?

1. உலகில் கச்சா எண்ணெய்த் தேவைக்கு தகுந்தாற் போல கச்சா எண்ணெய் சப்ளையும் இருக்க வேண்டும்.

2. அப்போது தான் கச்சா எண்ணெய் விலை நிலையாக இருக்கும்.

3. விலை நிலையாக இருந்தால் தான் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் அமெரிக்காவை நினைத்து புலம்பாமல் "எனக்கு தேவையான கச்சா எண்ணெய் விலை நிலையாகக் கிடைக்கிறது" இனி ஈரான் என்ன ஆனால் எனக்கு என்ன..? என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.

4. மற்ற நாடுகள் ஈரான் விஷயத்தை அதிகம் கிளறாமல், ஈரான் கச்சா எண்ணெய் வாங்க அனுமதி கேட்காமல் இருந்தால் தான், ஈரானுக்கு "அடடா நம்ம கச்சா எண்ணெய் இல்லாமலேயே உலகம் இயங்குகிறதே.. அமெரிக்காவோட சமாதானமாகப் போனால் தான் நம் பிழைப்பு ஓடுமோ..?" என பயப்பட வேண்டும்.

செயல்படுத்து

செயல்படுத்து

மேலே சொன்ன 4 விஷயத்தை நவம்பர் 2018-லேயே செயல்படுத்தியது அமெரிக்கா. நவம்பர் - டிசம்பர் 2018 வாக்கில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானைக் கூப்பிட்டு, தங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் சொன்னது அமெரிக்கா. அமெரிக்கா உடனான பேச்சு வார்த்தை நடந்த உடனேயே பத்திரிகையாளர்களிடம், "ஈரானில் இருந்து சந்தைக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய்யை, சவுதி அரேபியா கூடுதலாக உற்பத்தி செய்து நிரப்பும்" என எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இருக்கும் செய்திகளை அரசர் சல்மானே உறுதி செய்தார்.

ரஷ்ய தூது

ரஷ்ய தூது

அதோடு சவுதி இளவரசருக்கு, அமெரிக்கா இன்னொரு டாஸ்கையும் கொடுத்திருந்தது. அது, தன் பரம எதிரி ரஷ்யாவிடமும் பேசி கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வது தான். அதையும் கச்சிதமாகச் செய்து முடித்தார் சவுதி இளவரசர் சல்மான். ஆக உலகில் இரண்டு பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள், தங்கள் கச்சா எண்ணெய் உற்பத்தியை மீண்டும் அபரீவிதமாக அதிகரித்தார்கள்.

அமெரிக்க தவறு

அமெரிக்க தவறு

இந்தப் பக்கம் அமெரிக்க பொருளாதாரத் தடையைக் காரணம் காட்டி, அமெரிக்காவின் ஆலோசனைப்படி சவுதியும், ரஷ்யாவும் கச்சா எண்னெய் உற்பத்தியை அதிகப்படுத்தி விட்டார்கள். ஆனால் மற்றொரு பக்கம் இந்தியா, சீனா, ஜப்பான், இத்தாலி, கிரீஸ், தென் கொரியா, தைவான், துருக்கி ஆகிய எட்டு நாடுகளும் தங்களுக்கு ஈரானின் கச்சா எண்ணெய் எந்த அளவுக்குத் தேவை என அமெரிக்காவிடம் விளக்கமளித்தது. மனம் இறங்கிய அமெரிக்கா, அடுத்த ஆறு மாதங்களுக்கு (2018 நவம்பர் 04 முதல் 2019 மே 02 வரை) ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் என விதி விலக்கு கொடுத்தது. தப்பித்தது இந்தியா. இதனால் அக்டோபர் மாதத்தில் ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை சுமார் 85 டாலராக இருந்தது, தட தடவென சரிந்து டிசம்பர் 2018-ல் அதே ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 50 டாலரைத் தொட்டது.

சப்ளை அதிகம் தேவை குறைவு

சப்ளை அதிகம் தேவை குறைவு

ஏற்கனவே ஈரானிடம் இருந்து வர வேண்டிய கச்சா எண்ணெய்யை சவுதி மற்றும் ரஷ்யா மூலம் சந்தைக்கு கொண்டு வர வழி செய்த பின், மேலே சொன்ன எட்டு நாடுகளுக்கு ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்க விதி விலக்கு கொடுத்ததால், உலகில் கச்சா எண்ணெய் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டுவிட்டது. இதனாலும் விலை சுமார் 40 சதவிகிதம் சரிந்தது. ரஷ்யா எதிரி நாடு என்பதால் நேரடியாக கடுப்படித்தார்கள். ஆனால் சவுதி அமெரிக்காவிடமே "என்னங்க சார் நீங்க சொன்ன படி செஞ்சோம், இப்ப இவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுருச்சே" என வருத்தப்பட்டார்கள். தன் எதிரி ஈரானை காலி செய்யப் போகும் வேகத்தில் தன் நண்பன் சவுதிக்கு அடிபட்டதை நினைத்து வருத்தப்பட்ட அமெரிக்கா, ஒரு திட்டம் தீட்டியது.

2. சவுதிக்கு சாதகம்

2. சவுதிக்கு சாதகம்

நவம்பர் 2018-ல் அமெரிக்கா சொதப்பியதை மனதில் வைத்துக் கொண்டு, கச்சா எண்ணெய் விலையை சர்வதேச அளவில் நிலைப்படுத்த ஒபெக் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொண்டது. போட வைத்தது அமெரிக்கா. அந்த ஒப்பந்தம் டிசம்பர் 2018-ல் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் சொல்லி இருக்கும் அளவுக்குத் தான் ஒபெக் உறுப்பு நாடுகள் ஒவ்வொரு நாளும் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய வேண்டும். அதை மீறி கூடுதலாக உற்பத்தி செய்தால், மேலும் கச்சா எண்ணெய் விலை குறையும். எனவே இந்த டிசம்பர் 2018 ஒப்பந்தத்தில் சொல்லி இருக்கும் உற்பத்தி அளவைத் தான் பெரும்பாலான நாடுகள் உற்பத்தி செய்கின்றன. சவுதி அரேபியாவைத் தவிர.

காரணம்

காரணம்

ஏன் தெரியுமா..? முன்பு நவம்பர் 2018-ல், அமெரிக்கா சொன்ன படி அதிக அளவில் உற்பத்தி செய்து, ஈரானின் கச்சா எண்ணெய்யும் சந்தைக்கு வந்ததால், ஒட்டு மொத்த கச்சா எண்னெய் விலை சரிந்து விட்டது. இதனால் குறைந்த விலைக்கே தன் கச்சா எண்ணெய்களை விற்றதால், அடுத்தடுத்த டிசம்பர், ஜனவரி மாதங்களில் தன் உற்பத்தியைப் பெரிய அளவில் குறைத்துக் கொண்டது சவுதி. டிசம்பர் 2018 ஒபெக் ஒப்பந்தப்படி சவுதி அரேபியா நாள் ஒன்றுக்கு 10.3 மில்லியன் பேரல் வரை உற்பத்தி செய்யலாம். ஆனால் ஏப்ரல் 2019-ல் நாள் ஒன்றுக்கு சவுதி வெறும் 9.8 மில்லியன் பேரல் மட்டுமே உற்பத்தி செய்தது.

சவுதி இடம் தான்

சவுதி இடம் தான்

இப்போது சீனா, இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் வேண்டும் என்றால் சவுதி அரேபியாவைத் தான் நாட வேண்டும். அவர்களிடம் மட்டும் தான் இப்போது கூடுதலாக உற்பத்தி செய்வதற்கான கோட்டா இருக்கிறது. கடந்த 2018 - 19-ல் நம் இந்திய நாடு - ஈராக், சவுதி, ஈரான், அரபு அமீரகம், நைஜீரியா, குவைத், அமெரிக்கா என பல நாடுகளிடம் எண்ணெய் வாங்கி இருக்கிறது. இப்போது சவுதி அரேபியாவைத் தவிர ஈராக், குவைத், அரபு அமீரகம், நைஜீரியா அனைவரும், ஏற்கனவே தங்கள் கோட்டாவை முழுமையாக பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களிடம் கூடுதலாக ஆர்டர் கொடுக்க முடியாது. கொடுத்தாலும் தங்கள் ரெகுலர் வாடிக்கையாளர்களை விடுத்து இந்தியாவுக்கே ஏற்றுமதி செய்யமாட்டார்கள்.

போக்குவரத்துப் பிரச்னை

போக்குவரத்துப் பிரச்னை

அமெரிக்காவில் இருந்து வாங்கலாம் என்றால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துவிடும். எனவே சவுதி தான் ஒரே வழி. அதோடு ஆசிய கண்டங்களில் இருக்கும் நாடுகளுக்கு பெர்ஷிய வளைகுடாவில் இருந்து கப்பலில் சரக்குகளை அனுப்புவதால், இறக்குமதி செய்யும் ஆசிய நாடுகளுக்கான போக்குவரத்துச் செலவுகளும் குறையும். எனவே புத்திசாலித்தனமாக சவுதியிடம் இருந்து தான் அனைத்து ஆசிய நாடுகளும் எண்ணெய் வாங்குவார்கள்.

டெக்னிக்கல் பிரச்னை

டெக்னிக்கல் பிரச்னை

இந்தியா மற்றும் சீன எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் அதிக அடர்த்தி கொண்ட, அதிக சல்ஃபர் கொண்ட ஈரான் ஹெவி ரக கச்சா எண்ணெய்யைத் தான் வாங்கி சுத்திகரித்து வந்தன. இந்த ஈரான் ஹெவி ரக எண்ணெய்க்குப் பெரும்பாலும் ஒத்துப் போகும் விதத்தில் தான் அரேபியன் மீடியம் ரக எண்ணெய் இருக்கிறது. இந்தியா மற்றும் சீன எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலைகளில், சல்ஃபர் குறைவான, குறைந்த அடர்த்தி கொண்ட லைட் ரக கச்சா எண்ணெய்களைச் சுத்திகரிக்கும் வசதிகள் இல்லையாம். இந்த டெக்னிக்கல் பிரச்னையும் சவுதி அரேபியன் மீடியம் எண்ணெய்யைத் தான் இந்த இரண்டு நாடுகளும் வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இதுவும் சவுதிக்கு சாதகமாக்கிக் கொடுத்தது அமெரிக்கா.

கொள்ளை லாபம்

கொள்ளை லாபம்

சவுதி மற்றும் ஈராக்கில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் சாதாரண வழக்கம் போல, அதன் உற்பத்தி விலை + லாபம் என விற்கப்படுவதில்லை. இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருக்கும் கச்சா எண்ணெய் விலையைத் தான் தன் கச்சா எண்ணெய்யின் விலையாக எடுத்துக் கொள்கிறது சவுதி. இதனால் தொடக்கத்திலேயே செம லாபம் பார்த்துவிடுகிறது. அதன் பிறகு டாலர் Vs ரியால் விலை லாபத்தையும் எடுத்துக் கொள்கிறது.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக ஒரு பேரல் சவுதி அரேபிய கச்சா எண்ணெய் விலை 100 சவுதி ரியால் என வைத்துக் கொள்வோம். இதை டாலரில் கணக்கிட்டால் (100 ரியால் /3.75 ஒரு டாலருக்கு 3.75 சவுதி ரியால் ) ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை சுமார் 26.70 டாலர். அதை ஒரு பக்கம் வைத்து விட்டு, இந்தியாவில் தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலையைப் பார்ப்போம். ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 70.50 டாலராக இருக்கிறது என்றால், சவுதி அரேபியாவும் இந்தியாவுக்கு, கச்சா எண்ணெய்யை 70.50 டாலரருக்குத் தான் கொடுப்பார்கள். ஆக சவுதிக்கு இந்த இடத்தில் மட்டும் லாபம் 70.50 டாலர் - 26.70 டாலர் = 43.80 டாலர் லாபம். தன் நண்பன் சவுதி சம்பாதிக்க, அமெரிக்கா போட்டுக் கொடுத்த கொள்ளை லாபத் திட்டங்களில் இதுவும் ஒன்று.

பேரம் பேச முடியாது

பேரம் பேச முடியாது

சவுதி, ஈராக் போன்றவர்கள் கண்ட மேனிக்கு விலை வைத்தால், இந்தியா ஈரானிடமோ, குவைத்திடமோ நட்பு பாராட்டிய வாங்க இப்போதைக்கு முடியாது. அதனால் சவு சொல்லும் விலைக்கு கச்சா எண்ணெய்யை விலை கொடுத்து வாங்க வேண்டி இருக்கிறது. இந்தியாவுக்கு மட்டுமல்ல எல்லா எண்ணெய் இறக்குமதி நாடுகளுக்கும் சவுதி இப்படித் தான் தன் கச்சா எண்ணெய்க்கான விலையை நிர்ணயித்து லாபம் பார்க்கிறதாம். அதனால் தான் சவுதி அராம்கோ ஒரு வருடத்தில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் லாபம் பார்க்கிறது. சமீபமாக இந்தக் கொள்ளை லாபம் திட்டத்தில் ஈராக்கும் சேர்ந்திருக்கிறதாம்.

3. அமெரிக்க வியாபாரம்

3. அமெரிக்க வியாபாரம்

நவம்பர் 2008-ல் ஒபாமா அமெரிக்க அதிபராக பதவி ஏற்றார். அப்போது ஒரு நாளில் அமெரிக்கா ஏற்றுமதி செய்து வந்த கச்சா எண்ணெய் அளவு 17 லட்சம் பேரல்கள். ஒபாமா அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து நவம்பர் 2016-ல் விலகினார். அப்போது ஒரு நாளில் அமெரிக்கா ஏற்றுமதி செய்து வந்த கச்சா எண்ணெய் அளவு 50 லட்சம் பேரல்கள். ஆக 8 ஆண்டுகளில் 194 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இதை ஆண்டுக்கு பிரித்துக் கணக்கிட்டால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 15 சதவிகிதம் கச்சா எண்ணெய் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது.

இரண்டே ஆண்டில் 90 லட்சம்

இரண்டே ஆண்டில் 90 லட்சம்

ஆனால் டிரம்ப் ஆட்சிக்கு வந்து, இரண்டு ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் ஒரு நாளில் அமெரிக்கா ஏற்றுமதி செய்து வந்த கச்சா எண்ணெய் அளவு 90 லட்சம் பேரல்களளைத் தொட்டுவிட்டது. ஆண்டுக்கு சுமார் 40 சதவிகிதம் கூடுதலாக அமெரிக்கா தன் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை அதிகரித்திருக்கிறார் ட்ரம்பு. இத்தனை அசுர வளர்ச்சி அமெரிக்காவுக்கு கட்டாயம் வேண்டுமாம்.

இந்தியா

இந்தியா

அமெரிக்க வியாபாரத்துக்கு தகுந்த சந்தைகளாக பல ஆசிய நாடுகள் பலியாகி இருக்கின்றன. அதற்கு சிறந்த உதாரணம் இந்தியா. சில வருடங்களுக்கு முன்பு வரை அமெரிக்காவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கவே இல்லை. ஆனால் கடந்த 2018 - 19 மொத்த இந்திய கச்சா எண்ணெய் இறக்குமதியில் 5.62 சதவிகிதத்தை அமெரிக்கா பிடுங்கிக் கொண்டது. இத்தனைக்கும் இந்தியா, அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு தான் நஷ்டம். காரணம் போக்குவரத்துச் செலவுகள் மிக அதிகமாக இருக்கும்.

தலையாட்டுகிறோம்

தலையாட்டுகிறோம்

இப்படியாக அமெரிக்கா தான் நினைத்த 1. ஈரான் முடக்கம் - ஈரானை பொருளாதார ரீதியாக அடக்கி ஒடுக்குவது. 2. சவுதிக்கு சாதகம் - தன் விஸ்வாசி சவுதிக்கு கூடுதலாக எண்ணெய் உற்பத்தி செய்து காசு பார்க்க வைப்பது. 3. அமெரிக்க வியாபாரம் - அமெரிக்க எண்ணெய் ஏற்றுமதியை உலகம் முழுக்கக் கொஞ்சம் படர விடுவது என அனைத்தையும் ஈரான் மீது செக் வைப்பதன் மூலமே நிறைவேற்றிக் கொள்கிறது. நாமும் இன்று வரை ஒன்று பட முடியாமல் அரசியல் அழுத்தங்களில் அமெரிக்காவுக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iran economic sanction what America is going to achieve through Iran economic sanction

Iran economic sanction what America is going to achieve through Iran economic sanction
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X