அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பதற்றமான சூழல் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளே இல்லை என கூறும் அளவுக்கு நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்ட போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. இரு தரப்புமே சமாதானம் ஆகாமல் முரண்டுபிடிப்பதே இதற்கு காரணம்.
தற்போதைக்கு இரு தரப்புமே பெரிய அளவிலான தாக்குதல்களை நிறுத்தி வைத்துள்ளன. இருந்தாலும் அமைதி பேச்சுவார்த்தைக்கு வந்து போருக்கு முடிவு கட்ட தயாராக இல்லை. ஈரானும் அமெரிக்காவும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்து உலக நாடுகளை குழப்பமடைய வைத்துள்ளன. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் உடன்பாடே எட்டாமல் இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இருக்கும் வரை அமெரிக்க அரசுடன் இனி எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்போவதில்லை என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை குறைக்கவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகளுக்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
டிரம்ப் நிர்வாகத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் சாத்தியமில்லை என்பதை ஈரான் உணர்ந்துள்ளது என ஈரான் அரசு கூறியுள்ளது. ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபின் ஆலோசகர் மஜித் ஷாக்கிரி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் டிரம்ப் எங்களோடு ஒரு ஒப்பந்தத்திற்கு வரமாட்டார். எனவே, அவருடைய பதவிக்காலம் முடியும் வரை நாங்கள் அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்த மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் ஜனவரி 20, 2029 அன்று முடிவடைகிறது. அதுவரை அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் உறுதியாக தெரிவித்துள்ளது. ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் போர் நிறுத்தத்திற்கான பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இருப்பினும், இந்த பேச்சுவார்த்தைகள் பெரும்பாலும் தோல்வியிலேயே முடிந்தன.
கடந்த ஜூன் மாதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போன்ற சில முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், நிலையான அமைதி ஏற்படவில்லை. குறிப்பாக ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் இன்னும் ஒப்பந்தம் கையெழுத்தாகாதது, உலகளாவிய கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்ட இந்த பகுதியில், கப்பல் போக்குவரத்துக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால், கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம் நீடிக்கிறது.
இதற்கிடையே அதிபர் டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவும், ஈரானின் அணுசக்தி திட்டங்களை கட்டுப்படுத்தவும் பேச்சுவார்த்தை அவசியம் , இது அவர்களுக்கான இறுதி வாய்ப்பு என தெரிவித்திருந்தார். ஆனால், டிரம்ப்பின் இந்த மிரட்டல்களுக்கும், ராணுவ அழுத்தங்களுக்கும் அடிபணிய போவதில்லை என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
ஈரான் தற்போதைய நிலைப்பாட்டின் படி பார்த்தால் 2029 வரை பேச்சுவார்த்தை இல்லை என வைத்து கொண்டால் அப்போது வரை ஈரான் போர் நீடிக்குமா, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டே இருக்குமா, எண்ணெய் மற்றும் சரக்கு கப்பல்கள் போக்குவரத்து அதுவரை முடக்கப்படுமா என பல கேள்விகள் எழுகின்றன.


Click it and Unblock the Notifications

