போர்க்களங்கள் இனி எல்லைகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை, அவை நமது டேட்டா சென்டர்களுக்குள்ளும் நுழைந்துவிட்டன. 2026-ன் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் உலக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயத்தை எழுதியுள்ளன. பக்ரைனில் உள்ள அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) மையங்கள் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள், அமெரிக்காவின் தொழில்நுட்ப பலத்திற்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது.
இது வெறும் கட்டிடங்கள் மீதான தாக்குதல் அல்ல, லட்சக்கணக்கான மக்களின் வங்கிச் சேவைகள், வணிக ஆப்கள் மற்றும் அரசாங்கத் தரவுகள் இயங்கும் டிஜிட்டல் இதயத்தின் மீது நடத்தப்பட்ட துல்லியமான தாக்குதல். அமெரிக்காவின் ராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு இந்த தரவு மையங்கள் உதவுகின்றன என்று ஈரான் முன்வைக்கும் குற்றச்சாட்டு, உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அமேசான் போன்ற ஒரு சர்வதேச ஜாம்பவானின் பாதுகாப்பு வளையத்தையே ஈரான் ஊடுருவியது எப்படி? இந்த தாக்குதலால் வளைகுடா நாடுகளின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் என்ன? அமெரிக்கா இதற்கு பதிலடியாக தொடுக்கப் போகும் சைபர் போர் எப்படி இருக்கும்? தொழில்நுட்ப உலகையே உலுக்கி உள்ள இந்த கிளவுட் வார் (Cloud War) குறித்து விரிவாகப் பார்ப்போம்.
பக்ரைனின் ஹமலா பகுதியில் அமைந்துள்ள அந்த நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான பாட்டெல்கோ (Batelco) தலைமையகத்தின் மீது, புதன் கிழமையன்று ஈரானின் ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தலைமையகமானது அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசானின் வெப் சர்வீஸ் தரவு மையங்களையும் கொண்டுள்ளது. இது நேரடியாக அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனத்தின் மீதான தாக்குதலாகவும் கருதப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்காவின் கூகுள், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் டெஸ்லா போன்ற 18 நிறுவனங்களை இலக்கு வைப்போம் என்று ஈரான் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தாக்குதலின் தொடக்கமாகவே அமேசான் மீதான இந்தத் தாக்குதல் பார்க்கப்படுகிறது.
வான்வழியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலால் கட்டிடங்கள் சிதைந்துள்ளதாகவும், மின் இணைப்புகள் துண்டிக்கப் பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் வங்கிச் சேவைகள் மற்றும் விமான முன்பதிவு அமைப்புகள் பெரும் முடக்கத்தை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அமீரகம் மற்றும் பக்ரைனில் உள்ள அமேசான் மையங்கள் இரண்டு முறை ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகின. இது ஒரு மாதத்திற்குள் நடக்கும் மூன்றாவது பெரிய பாதிப்பாகும். இது ஈரான் - அமெரிக்கா இடையே மேற்கொண்டு பிரச்சனையை அதிகரிக்க வழிவகுக்கலாம். மேற்கொண்டு சர்வதேச அளவில் பல சேவைகள் முடங்கலாம்.


Click it and Unblock the Notifications