அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது தீவிர ராணுவ தாக்குதலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா தனது போர் விமானங்களை பல இடங்களில் நிலை நிறுத்தி வருவது தெரிய வந்துள்ளது.
நவம்பர் 3ஆம் தேதி இடைக்கால தேர்தலுக்கு பின் அமெரிக்கா , ஈரான் மீது தீவிர தாக்குதலை நடத்த இருப்பதாகவும் நட்பு நாடுகளுக்கு இது தொடர்பாக தகவல் அளிக்கப்பட்டதாகவும் முதலில் சொல்லப்பட்டது. இந்நிலையில் ஈரானுக்கு எதிரான தாக்குதலுக்கு தயாராகி வரும் அமெரிக்க ராணுவம், 10 ராணுவ விமானங்களை இஸ்ரேல் நாட்டின் விமான தளங்களில் நிலைநிறுத்தி இருக்கிறது.

இஸ்ரேலை தவிர, ஜோர்டான் , கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய மூன்று நாடுகளிலும் அமெரிக்காவின் பிற ராணுவ விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இந்த விமானங்களில், வான் பாதுகாப்பு அமைப்புகளான THAAD மற்றும் இடைமறிப்பு ஏவுகணைகள் கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக அமெரிக்க உயர்மட்ட தளபதிகள் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, ஈரானுக்கு எதிரான ராணுவ தாக்குதல் சாத்திய கூறுகள் குறித்து விளக்கம் தந்துள்ளனர். மேலும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே தீவிரமான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் தேர்தல் முடிவுகளில் நீடிக்கும் இழுபறி மற்றும் அமெரிக்க இடைக்கால தேர்தல் ஆகியவற்றுக்கு முடிவு கிடைத்த உடன் ஈரான் மீது தாக்குதல் நடத்த இரு நாடுகளும் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், டிரம்ப் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக இதனை அறிவிக்கவில்லை. அமெரிக்காவும் இஸ்ரேலும் அதிபர் டிரம்ப் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் தங்களை தயார்படுத்தி கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.
அடுத்ததாக கூடுதல் விமானம் தாங்கி கப்பல்களும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு வந்துசேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இப்பகுதியில் அமெரிக்க கடற்படையின் பலத்தை மேலும் அதிகரிக்கும். இந்த ராணுவ நகர்வுகள் மற்றும் விமானங்களின் வருகை, டிரம்ப் ஈரான் மீது உறுதியாக தாக்குதலை அங்கீகரித்துவிட்டார் என்பதை முழுமையாக உறுதிப்படுத்தவில்லை. மாறாக, சாத்தியமான மோதல்களுக்கான முன் ஏற்பாடு நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி ஈரானில் நீண்ட காலமாக 'யுத்தமும் இல்லை, சமாதானமும் இல்லை' என்ற நிச்சயமற்ற நிலை நிலவி வருவதாக கவலை தெரிவித்துள்ளார். மேலும் உடனடியாக இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். இதனால் ஈரான் தரப்பும் பேச்சுவார்த்தையாக இருந்தாலும் சரி போராக இருந்தாலும் சரி அனைத்திற்கும் தயார் என கூறியுள்ளது. இதனால் அடுத்த வாரம் ஈரானில் என்ன நடக்குமோ என்ற பதற்றம் உலக நாடுகள் மத்தியில் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications

