வாஷிங்டன்: கடந்த 10 வருடத்துடன் ஒப்பிடும்போது அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வளர்ச்சி மிக மோசமாக அமைந்திருப்பது தெரிய வந்துள்ளது. நடப்பு ஆண்டில் ஒரு மில்லியன் வேலைகள் காணாமல் போய்விட்டன என நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் அமெரிக்கா ஒரு பெரிய மந்த நிலையை நோக்கி செல்வதாக அச்சம் எழுந்துள்ளது.
கோல்டுமேன் சச்சஸ் நிறுவனம் மற்றும் வெல்ஸ் பார்கோ நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளது.

பே ரோல் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 3 லட்சத்து 60 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் இந்த எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவை எட்டும் என கோல்ட்மேன் சச்சஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இதனிடையே அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் டொனால்டு ட்ரம்ப் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன என்றும் அரசு உண்மையை மறைத்து விட்டு பொய்யான அறிக்கைகளை வெளியிடுவதாகவும் சாடியுள்ளார்.
குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் போட்டியில் இருக்கும் நிலையில் அவர் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை தான் தன்னுடைய தேர்தல் வாக்குறுதியாக வழங்கி வருகிறார் .எனவே குடியரசு கட்சியினர் வேலை வாய்ப்பு பிரச்சனையை மிகப்பெரியதாக எடுத்துள்ளனர்.
அதற்கு ஏற்ற வகையில் அமெரிக்காவில் தற்போது மந்த நிலை காணப்படுகிறது. கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. தற்போதைய சூழலில் அதிகாரபூர்வமாக அமெரிக்கா மந்த நிலையை எட்டவில்லை இருந்தாலும் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவது உள்ளிட்ட காரணிகளை வைத்து பார்க்கும் போது அமெரிக்கா மந்தநிலையை நோக்கி செல்வதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இதற்கிடையே தொழிலாளர் புள்ளியியல் பணியகம் அமெரிக்க வேலைவாய்ப்பின் திருத்தப்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டுள்ளது, இது முந்தைய அறிக்கையிலிருந்து 818,000 வேலைவாய்ப்புகள் சரிந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. இதன்படி 2009 ஆம் ஆண்டின் பெரும் மந்தநிலைக்குப் பிறகு மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது. இது வேலைச் சந்தையின் ஒட்டுமொத்த வலிமை குறித்த கவலைகளை எழுப்புகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
மார்ச் மாதத்துடன் முடிவடைந்த 12 மாதங்களில் அமெரிக்காவில் வேலைவாய்ப்பு உருவாக்கம் முன்பு மதிப்பிடப்பட்டதை விட 0.5% குறைவாக இருந்தது என்று இந்த அறிக்கை கூறுகிறது.
இதன் பொருள் என்னவென்றால், அந்த காலகட்டத்தில் உண்மையான வேலை வளர்ச்சி முன்னர் கூறப்பட்டதை விட சுமார் 30% குறைவாக இருந்தது, மாதாந்திர சராசரி 242,000 வேலைகளிலிருந்து 174,000 ஆக குறைந்தது. அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை அச்சங்கள் வளர்ந்து வருவதால், உலகளாவிய பங்குச்சந்தைகளில் தாக்கம் ஏற்படுத்தும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications