இந்தியாவின் அண்டை நாடாக பாகிஸ்தான் இருக்கிறது. பாகிஸ்தானில் நடைபெறும் எந்த ஒரு ஆட்சியில் மாற்றம் மற்றும் அரசியல் ரீதியான மாற்றமும் இந்தியாவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே ஏற்கனவே எல்லையில் மோதல் இருக்கிறது. பாகிஸ்தான் ஒரு புறம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியாவிற்கு எதிராக ஊக்குவித்து வருகிறது . மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடம் இந்தியாவிற்கு எதிரான ஒரு மனநிலையை உருவாக்க முயற்சி செய்து வருகிறது. இந்த சூழலில் தான் பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சி கவிழ்ப்பு சதி மேற்கொள்வதாக தகவல்கள் பரவுகின்றன.

பாகிஸ்தான் ராணுவ தளபதியாக இருக்கக்கூடிய அசிம் முனிர் அந்நாட்டின் சக்தி வாய்ந்த நபராக உருவெடுத்து இருக்கிறார் .அண்மையில் கூட இவர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் அரசிலும் இவருடைய தலையீடு அதிகரித்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழலில் தான் பாகிஸ்தானில் வெளியாகி வரக்கூடிய டான் என்ற நாளிதழ் Rebutting Rumours என்ற பெயரில் ஒரு கட்டுரையை வெளியிட்டு இருக்கிறது .
பாகிஸ்தானில் ராணுவம் ஆட்சிக்கவிழ்ப்பு சதியில் ஈடுபடுகிறது விரைவில் ராணுவ தளபதி அசிம் முனீர் பாகிஸ்தானில் ஆட்சியை கைப்பற்ற போகிறார் என பரவக்கூடிய தகவல்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. அசிம் முனீர் இது போன்ற தகவல்களில் உண்மை இல்லை இவை வெறும் வதந்திதான் இதைவிட நான் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன என தானே முன் வந்து விளக்கம் தரும் அளவுக்கு நிலைமை மோசமடைந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது போன்ற வதந்திகளை யார் பரப்புவது என்பதுதான் தற்போதைய கேள்வி என சந்தேகம் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்பட்டு வருகிறது பாகிஸ்தான் பிரதமராக செபாஷ் ஷெரிப் பதவி வகித்து வருகிறார் . பாகிஸ்தானில் ஏற்கனவே அரசியல் ரீதியிலான பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு பல்வேறு வன்முறைகள் ஏற்பட்டிருக்கின்றன. பொருளாதார ரீதியாக நாடு மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
இந்த சூழலில் தான் 2024 ஆம் ஆண்டு தேர்தல் நடந்து இந்த பிரச்சனைகளுக்கு முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தானில் எப்பொழுதுமே இராணுவத்தின் கை ஓங்கி தான் இருக்கும் என்பது தான் உண்மை. பாகிஸ்தானுக்கும் ராணுவ ஆட்சிக்கும் நீண்ட வரலாறு உண்டு 1958 ,1977, 1999 என பலமுறை அங்கே ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்புகள் நிகழ்ந்திருக்கின்றன.
1999 ஆம் ஆண்டு ராணுவ தளபதி பர்வேஷ் முஷரஃப் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கைது செய்து ஆட்சியை கைப்பற்றினார். இப்போது பாகிஸ்தானின் உண்மை நிலவரமே வேறு. பாகிஸ்தான் அரசாங்கம் தான் கடந்த மே மாதம் அசிம் முனீரை ராணுவ தளபதியாக மட்டுமின்றி ஃபீல்டு மார்ஷலாகவும் பதவி உயர்வு தந்தது. இப்போது பாகிஸ்தானின் பிரதிநிதியாக பல நாடுகளுக்கும் அவர் தான் பயணம் செய்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை விட இவருடைய கை வலுப்பெற்று வருவது உண்மை தான், ஆனால் ஆட்சி கவிழ்ப்பு சதி என்பதில் உண்மை இல்லை என டான் கட்டுரை கூறுகிறது.


Click it and Unblock the Notifications