ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் வலுத்து வரக்கூடிய சூழலில் ஈரான் நாட்டு அரசு தங்கள் நாட்டு மக்களுக்கு மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஈரானை சேர்ந்த மக்கள் தங்கள் போனில் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியை உடனடியாக டெலிட் செய்யும்படி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
வாட்ஸ் அப் பயன்படுத்த தடை: ஈரான் அரசுக்கு சொந்தமான தொலைக்காட்சி மக்களுக்கு வெளியிட்டுள்ள செய்தியில் , ஈரான் குடிமக்கள் அனைவரும் தங்களுடைய செல்போனில் இருந்து உடனடியாக வாட்ஸ் அப் செயலியை டெலிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. வாட்ஸ் அப் செயலி ஈரான் மக்களின் தரவுகளை சேமித்து இஸ்ரேல் நாட்டுடன் பகிர்வதாக குற்றம் சாட்டி ஈரான் அரசு இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.

தகவலை பகிரவில்லை என வாட்ஸ் அப் விளக்கம்: இதனிடையே வாட்ஸ் அப்பின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்திருக்கிறது. மக்களுக்கு மிகவும் அவசியமாக வாட்ஸ் அப் செயலி தேவைப்படுகின்ற நேரத்தில் அதனை முடக்கியாக வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஈரான் அரசு போலியான குற்றச்சாட்டை முன்வைக்கிறது என மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் எண்ட் -டூ-எண்ட் என்கிரிப்ஷன் (end to end encryption) பயன்படுத்தப்படுவதால் பயனாளர்களின் எந்த தகவலையும் யாராலும் அணுக முடியாது என கூறி இருக்கிறது.
வாட்ஸ் அப் மறுப்பு: பயனர்களின் இருப்பிடம் ,அவர்கள் பகிரக் கூடிய தகவல்கள் ஆகியவற்றை நாங்கள் எந்த அரசிடமும் பகிரவில்லை என உறுதிப்பட தெரிவித்துள்ளது. end to end encryption அடிப்படையில் வாட்ஸ் அப் இயங்குவதால் ஒரு தகவலை அனுப்பும் நபர் மற்றும் அதனை பெறும் நபர் ஆகிய இருவரால் மட்டுமே அதனை பார்க்க முடியும் படிக்க முடியும் என விளக்கம் தந்துள்ளது. யாரேனும் அந்த தகவலை இடைமறித்து தெரிந்து கொள்ள விரும்பினால் அவர்களுக்கு அது அவர்கள் புரிந்து கொள்ள முடியாத ஒரு தகவலாக தான் சென்று சேரும் என்றும் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு செயலிகளுக்கு தடை: ஈரான் அரசு எப்பொழுதுமே வெளிநாட்டு டெக் நிறுவனங்களின் செயலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் கொண்டிருக்கிறது. 2022 ஆம் ஆண்டு ஈரானில் தேசிய அளவிலான மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. அந்த சமயத்தில் ஈரான் நாட்டு அரசு வாட்ஸ் அப், கூகுள் பிளே ஸ்டோர் ஆகியவற்றை முடக்கியது. பின்னர் 2023 ஆம் ஆண்டு இந்த தடைகள் நீக்கப்பட்டன. இருந்தாலும் ஈரான் நாட்டில் வாட்ஸ்அப் ,டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்துவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
வெளிநாட்டு இணையதளங்களுக்கு தடை: ஈரான் அரசு வெளிநாட்டு தகவல் தொடர்பு செயலிகள் மீது கட்டுப்பாடுகளை விதித்தாலும் அந்த நாட்டில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு செயலியாக வாட்ஸ் அப் தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது அதற்கு தான் அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.மேலும் வெளிநாடுகள் சம்பந்தப்பட்ட இணையதளங்களை அணுக முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை: அரசுக்கு சொந்தமான மற்றும் ஈரானில் இயங்கக்கூடிய இணையதளங்கள் மட்டுமே அந்நாட்டு மக்களால் தற்போது அணுக முடிவதாகவும் ஈரான் நாட்டு அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், லேப்டாப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் தங்கள் மீது சைபர் போரில் ஈடுபடுவதாலே இப்படி ஒரு நடவடிக்கை எடுத்திருப்பதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications