இஸ்ரேல் - பாலஸ்தீனம் மத்தியிலான பிரச்சனை இன்னும் முடியாத நிலையில், வளைகுடா நாடுகள் மத்தியில் பாலஸ்தீனத்திற்கு அதிகப்படியான ஆதரவு கிடைத்து வருகிறது. இஸ்ரேல் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவியுடன் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, கத்தார் நாட்டின் அரசு முதலீட்டில் இயங்கும் அல் ஜசீரா செய்தி நிறுவனத்தின் இஸ்ரேல் அலுவலகத்தை மூட உத்தரவிட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

பெஞ்சமின் நெதன்யாகு தனது முடிவை டிவிட்டர் தளத்தின் வழியாக அறிவித்தார், இந்த உத்தரவின் விளைவுகள் என்ன, எப்போது செயல்படுத்தப்படும், தற்காலிகமாகவா அல்லது நிரந்தரமாகவா அலுவலகம் மூடப்படும் என்பது குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை. ஆனால் மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலுக்கும் அல் ஜசீராவுக்கும் இடையே நீண்டகாலமாகப் பிரச்சனை இருந்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு இப்பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கத்தார் அரசு முக்கிய பங்கு வகிக்கும் வேளையில் அல் ஜசீரா பத்திரிக்கை மீதான இந்த உத்தரவு இஸ்ரேலுக்கும் கத்தாருக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் அமைந்துள்ளது என AP பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
அல் ஜசீரா பத்திரிக்கை தன் நாட்டின் மீது பாகுபாடு காட்டுகிறது என்று நீண்ட காலமாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இஸ்ரேல் காசா மீது தாக்குதல் துவங்கியதில் இருந்து, களத்தில் இருந்து நேரடி ரிப்போர்ட் செய்யும் முக்கியமான சர்வதேச பத்திரிக்கையாக அல் ஜசீரா விளங்குகிறது.
இஸ்ரேல் வான்வழித் தாக்குதல், மருத்துவமனை மீது செய்யப்பட்ட தாக்குதல் மூலம் மக்கள் ரத்தக்களறியான காட்சிகளை அல் ஜசீரா ஒளிபரப்பியது, மேலும் இஸ்ரேல் படைகள் இனப்படுகொலை செய்ததாகவும் குற்றம்சாட்டியது. இதேவேளையில் ஹமாஸ் அமைப்புடன் அல் ஜசீரா ஒத்துழைப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
கத்தார் அரசின் முதலீட்டில் இயங்கும் அல் ஜசீரா செய்தி நிறுவனம், இந்த உத்தரவு குறித்த கருத்தை இதுவரை தெரிவிக்கவில்லை. ஞாயிற்றுக்கிழமை தனது அரபு மொழி சேவையில் இஸ்ரேலின் இந்த அறிவிப்பை உறுதி செய்தது அல் ஜசீரா. ஆனால், நெதன்யாகு இந்த அறிவிப்பை வெளியிட்ட சில நிமிடங்களிலேயே, கிழக்கு ஜெருசலேமில் இருந்து நேரலைக் காட்சிகளை ஆங்கில மொழி பிரிவில் அல் ஜசீரா ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications