ஜப்பான்: உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடான ஜப்பான் தற்போது ஆட்டம் கண்டு வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் நாணயம் யென்னின் மதிப்பு கடந்த 34 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை அடைந்துள்ளது. இது அண்டை நாடுகளின் கரன்சிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர் நிதி சார்ந்த வல்லுனர்கள்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் யென்னின் மதிப்பு 151.97 என்ற அளவில் உள்ளது. 1990க்கு பிறகு யென்னின் மதிப்பு இத்தகைய வீழ்ச்சி அடைவது இதுவே முதல் முறையாகும். இதனால் ஜப்பான் பொருளாதாரம் கடுமையான சிக்கலில் இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அரசு இந்த நிலையை கவனித்து வருவதாகவும், இது மிகத் தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை என்றும் ஜப்பானின் நிதி அமைச்சர் சுசூகி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையை சரிப்படுத்த அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.
ஜப்பான் பொருளாதார சூழல் மிகவும் கவலைப்பட வேண்டிய விஷயம் மட்டும் அல்ல துரிதமாக செயல்பட்டு நிலைமையை சரி செய்ய வேண்டிய நிர்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
அடுத்த சில நாட்களில் யென்னின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்து டாலரின் மதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்றும் எச்சரித்துள்ளனர். தற்போது சந்தையின் ஏற்ற இறக்கங்களை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் இதனை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
ஜப்பான் மத்திய வங்கியும் பொருளாதார நிலைமை மற்றும் பங்குச்சந்தை நிலவரம் ஆகியவற்றை கவனித்து வருவதாக கூறியுள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானின் கரன்சியான யென்னின் வீழ்ச்சியானது ஏற்றுமதி கட்டணங்களை உயர்த்தும். மேலும் பண வீக்கம் அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஜப்பான் கரன்சியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியானது மற்ற நாடுகளின் கரன்சியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் இது ஒரு டாமினோ விளைவு என என்ஏபி ஆய்வாளர் ராட்ரிகோ காட்ரில் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஜப்பான் மத்திய வங்கியானது தனது நிதிக் கொள்கையை அறிவித்தது. 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக ஜப்பான் மத்திய வங்கியானது வட்டி விகிதங்களை அதிகரித்தது.
யென்னின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதால், ஜப்பானை சேர்ந்த வர்த்தகர்கள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக முதலீடு செய்து லாபம் பார்க்க தொடங்கியுள்ளனர். அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பான் கரன்சியின் மதிப்பானது இந்த காலாண்டில் மட்டும் 7 சதவிகிதம் சரிவை கண்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications