செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம் என நவீன தொழில்நுட்பம் கோலோச்சும் நேரத்தில், எதிர்காலத்தில் மனிதர்களின் பெரும்பாலான வேலைகளை இந்த தொழில்நுட்பங்களே மேற்கொள்ளும் நிலைமை உருவாகியுள்ளது. எனவே தான் பெரு நிறுவனங்கள் இவ்வகை தொழில்நுட்பங்களில் அதிகம் முதலீடு செய்கின்றன.
அமெரிக்காவை சேர்ந்த Figure AI என்ற நிறுவனம் மனித உருவம் கொண்ட ரோபோ தயாரிப்பில் ஈடுபட உள்ளது. இதற்கான நிதி திரட்டலில் ஈடுபட்ட போது Figure AI நிறுவனத்திற்கு 675 மில்லியன் டாலர்கள் நிதி கிடைத்துள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இதில் முதலீடு செய்திருப்பது தான் தற்போது பேசு பொருளாக உள்ளது.

ஏற்கனவே டெஸ்லா இத்தகைய ரோபோக்களை செய்து வரும் வேளையில், Figure AI நிறுவனம் போட்டியாக வந்துள்ளது. இதேபோல் டெஸ்லா உடனும், எலான் மஸ்க் உடனும் போட்டிப்போடும் பல பெரும் தலைகள் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் இந்த நிறுவனத்தில் 100 மில்லியன் டாலர்களை முதலீடு செய்திருக்கிறார். அதே போல மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 95 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. மேலும் என்விடியா நிறுவனம் 50 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் கொண்ட ரோபோக்கள்: Figure AI நிறுவனம் ChatGPT ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதலீட்டில் இயங்கி வரும் இந்நிறுவனம் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் 675 மில்லியன் டாலர் அளவிலான நிதியை திரட்டுகிறது.
ChatGPT பயன்பாட்டுக்கு வந்த பிறகு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களில் வளர்ச்சி உச்சத்தை எட்டியது. இந்த துறை மீது பலரது கவனமும் திரும்பியுள்ளது. எனவே செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பங்கள் மீது அதிக முதலீடும் வர தொடங்கியுள்ளது.
Figure AI நிறுவனத்தில் இண்டெலின் வென்ச்சர் கேபிடல் பிரிவான எல்ஜி இன்னோடெக், சாம்சங்கின் முதலீட்டு குழுமம், பார்க்வே வென்ச்சர் கேபிடல் மற்றும் அலைன் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் கணிசமான தொகையை முதலீடாக வழங்கியுள்ளன.
ஏஐ ரோபோடிக்ஸ் துறைக்கு மவுசு: ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பங்கள் வருங்காலத்தில் பெரும் வளர்ச்சியை காணும். பல்வேறு சிக்கலான பணிகளை ரோபோக்கள் கொண்டு மேற்கொள்ள இந்த தொழில்நுட்பம் உதவும்.
இதன் அடிப்படையில் தான் Figure AI, மனித உருவம் கொண்ட செயற்கை நுண்ணறிவு நுட்பத்தில் செயல்படும் ரோபோக்களை தயாரிக்க உள்ளது. Figure 01 என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோக்கள், மனிதர்கள் செய்ய முடியாத அல்லது ஆபத்தானதாக கருதப்படும் பணிகளை எளிதாக செய்யும் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏஐ ரோபோடிக்ஸ் துறை என்பது மிகவும் பிஸியான துறையாக மாறியுள்ளது. முன்னதாக நார்வேவை சேர்ந்த ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப், 1எக்ஸ் டெக்னாலஜிஸ் 100 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியது.
அதே போல வான்கூவரை தலைமையிடமாக கொண்ட சான்சுரி ஏஐ நிறுவனம் மனித உருவம் கொண்ட பீனிக்ஸ் என்ற ரோபோவை வடிவமைத்து வருகிறது. டெஸ்லா நிறுவனமும் ஆப்டிமஸ் என்ற ரோபோவை உருவாக்கி வருகிறது. ஏற்கனவே அமேசான் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது பணிக்கிடங்குகளில் ரோபோக்களை பணி அமர்த்தியுள்ளன.
Story written by: Devika


Click it and Unblock the Notifications