அமெரிக்கா: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு போட்டி வரியை விதித்திருப்பதால் உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு 60% என உயர்ந்திருப்பதாக ஜே பி மார்கன் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 2ஆம் தேதி இந்தியா, சீனா உள்ளிட பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கு புதிய வரிகளை அறிவித்தார். இந்த நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிகபட்ச வரி விதிப்பதாகவும் இதன் காரணமாகவே தாங்களும் போட்டி வரியை விதிப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விளக்கம் தந்துள்ளது. இதனிடையே அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதித்துள்ளது.

டிரம்ப் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை காரணமாக சர்வதேச வர்த்தக போர் அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச நிதி சந்தையின் மந்தநிலை குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் சர்வதேச நிதி நிறுவனமான ஜே பி மார்கன் உலக பொருளாதாரம் மந்த நிலைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்பு 60 சதவீதமாக அதிகரித்துள்ளது எனக் கூறியிருக்கிறது. இதற்கு முன்பு இது 40 சதவீதமாக தான் இருந்தது.
2025 ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமெரிக்க அரசின் கொள்கைகள் மாறி இருக்கின்றன என ஜே பி மார்கன் வெளியிட்டுள்ள உள்ள அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எதிர்பார்த்ததை விட அதிகபட்ச வரியை டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அறிவித்திருப்பதாகவும் இது தொழில் தொடங்குவதற்கு சாதகமான சூழலை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிடுகிறது.
பல்வேறு நாடுகளும் அமெரிக்க பொருள்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை அதிகரிக்கும் இது சர்வதேச அளவில் பொருளாதாரத்தையும் பொருள் விநியோக சங்கிலிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என ஜே பி மார்கன் நிறுவனம் கூறியுள்ளது. எஸ்&பி குளோபல் நிறுவனமும் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பு 35 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மார்ச் மாதம் இது 25 சதவீதமாகத் தான் இருந்தது.
கோல்டுமேன் சாக்ஸ் நிறுவனம் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்வதற்கான வாய்ப்பை 20 சதவீதத்திலிருந்து 35 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு அமெரிக்க பொருளாதார அடித்தளம் வலுவாக இல்லை என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹெச்எஸ்பிசி நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு சென்று விடும் என்றும் ஈக்விட்டி சந்தைகளில் தற்போது அதன் தாக்கம் தெரிய தொடங்கிவிட்டது என்றும் கூறியிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்று முடிவுகள் வெளியாகி டொனால்ட் டிரம்ப் அதிபராக வெற்றி பெற்றார். அந்த சமயத்தில் டொனால்ட் டிரம்ப் தொழில் தொடங்குவதற்கு சாதகமான கொள்கைகளை அமெரிக்காவில் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையுடன் அமெரிக்க ஈக்விட்டி சந்தை பெருமளவில் வளர்ச்சி அடைந்தது. ஆனால் ஜனவரி மாதம் டிரம்ப் பல்வேறு நாடுகளின் பொருள்களுக்கு இறக்குமதி வரியை அதிகரிக்க தொடங்கினார் அதிலிருந்து அமெரிக்க ஈக்விட்டி சந்தைகள் சரிவடைய தொடங்கின.


Click it and Unblock the Notifications