தொழில் ரீதியாக உலகம் முழுவதும் இருக்கக் கூடிய நிபுணர்களை ஒருங்கிணைக்கும் ஒரு தளமாக இருக்கக்கூடிய லிங்குடின்னில் ஊழியர்கள் திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமானது தான் லிங்குடின் நிறுவனம். சமூகவலைதளங்களில் எப்படி நாம் நண்பர்களோடு தொடர்புகொள்ள முடிகிறதோ அப்படி தொழில் ரீதியாக தொடர்பு கொள்ளவும் வேலைவாய்ப்பு பெறவும் லிங்குடின் செயலி உதவுகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்ற தந்த லிங்குடின் நிறுவனத்திலேயே நூற்றுக்கும் அதிகமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் பல்வேறு துறைகளை சார்ந்த ஊழியர்களை லிங்குடின் நிறுவனம் வேலையில் இருந்து நீக்கி இருப்பது தெரியவந்துள்ளது. பொறியியல் மற்றும் வடிவமைப்பு என பல்வேறு துறைகளை சேர்ந்த 281 ஊழியர்களை இந்நிறுவனம் வீட்டிற்கு அனுப்பியுள்ளது.
மைக்ரோசாப்டுக்கு சொந்தமான லிங்குடின் நிறுவனம் மௌண்டைன் வியூ அலுவலகத்தில் வேலை செய்த 159 ஊழியர்களையும், சான் பிரான்சிஸ்கோ பகுதி அலுவலகத்தில் வேலை செய்து வந்த 60 ஊழியர்களையும் சன் வாலே பகுதியில் வேலை செய்து 23 பேரையும், கார்பின்டெரியா பகுதியில் வேலை செய்து வந்த 11 பேரையும் வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது. அதேபோல வீட்டில் இருந்து வேலை செய்த வந்து 28 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கிறது.
அண்மையில் தான் லிங்குடின் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மைக்ரோசாப்டில் 6,000ஊழியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர். அதன் ஒரு பகுதியாகவே லிங்குடின் நிறுவனத்திலும் இந்த பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சத்ய நாதெல்லா அண்மையில் அளித்த ஒரு பேட்டியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது தங்கள் நிறுவனத்திற்கு தேவையான 30 சதவீத கோடிங் வேலைகளை கவனித்துக் கொள்கிறது என்பதால் அந்த பிரிவில் வேலை செய்து வந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.
குறிப்பாக மூத்த நிலையில் இருந்த பல்வேறு ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு இருக்கின்றனர். 2023 ஆம் ஆண்டில் மட்டும் லிங்குடின் நிறுவனம் 716 ஊழியர்களை திடீரென வேலையை நீக்கியது. தற்போதைக்கு லிங்குடின் நிறுவனத்தில் 18,400 பேர் வேலை செய்கின்றனர். Layoffs.fyi என்ற தளம் வெளியிட்ட தகவலின் படி 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை 137 நிறுவனங்கள் 62,114 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.


Click it and Unblock the Notifications