இந்தியா - மாலத்தீவு இடையே பல கசப்பான சம்பவங்களுக்குப் பின்பு, அந்நாட்டின் முக்கியமான கோரிக்கைக்கு இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. சற்றும் எதிர்பார்க்காத வகையில் சீனாவும் இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் போருக்கு பின்பு ஆசிய நாடுகள் அனைத்தும் அமெரிக்க டாலரை நம்பி இனி வர்த்தகம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வேளையில், ஏற்றுமதி - இறக்குமதிக்கு உள்நாட்டு நாணயத்தைப் பயன்படுத்த முடிவு செய்தது.

இதன் அடிப்படையில் மாலத்தீவு நாடு மே 22 தேதி (இன்று) வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க டாலருக்கு பதிலாக, தங்கள் இறக்குமதிக்கு இந்திய ரூபாய் மற்றும் சீன யுவான் ஆகிய நாணயங்களில் செலுத்த இரு நாடுகளுடன் (இந்தியா மற்றும் சீனா) ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், மொத்த இறக்குமதி செலவில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை மாலத்தீவு நாடுகள் சேமிக்க உள்ளது.
இருதரப்பு வர்த்தகத்தை உள்ளூர் நாணயங்களில் செயல்படுத்துவதற்காக, 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய ரிசர்வ் வங்கி, மாலத்தீவு உட்பட 22 நாடுகளுக்கு அனுமதி அளித்தது. இந்த அறிவிப்பு மூலம் ஸ்பெஷல் ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளை (Special Rupee Vostro Accounts - SRVAs) திறக்க ஆர்பிஐ அனுமதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
மாலத்தீவின் பொருளாதார மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது சயீத், இரு வாரங்களுக்கு முன்னர் இந்திய உயர் ஆணையர் (High Commissioner) முனு மஹாவர் உடன் ஒரு முக்கிய கூட்டத்தில் சந்தித்தார்.
அப்போது, இந்திய அரசு, மாலத்தீவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய ரூபாயில் பணம் செலுத்துவதற்கான ஏற்பாடுகளுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்க உறுதி செய்துள்ளது என தெரிவித்தார் முகமது சயீத்.
அதேபோல், சீன வர்த்தகத் துறை அமைச்சகத்திடம் இருந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கடிதம் கிடைத்ததாகவும், அதில், மாலத்தீவு அதிபர் முகமது முயிஸ்ஸுவின் கோரிக்கைக்கு ஏற்ப, இறக்குமதி செலவுகளைச் சீன நாணயமான யுவானில் செலுத்தும் வழிமுறையை அனுமதிப்பதில் சீனா ஒத்துழைக்கும் என உறுதியளித்துள்ளதாகவும் சயீத் தெரிவித்தார்.
மாலத்தீவு இந்தியாவிடமிருந்து ஆண்டுதோறும் 780 மில்லியன் டாலர் மதிப்பிலும், சீனாவிடமிருந்து 720 மில்லியன் டாலர் மதிப்பிலும் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
இந்த நிலையில் இறக்குமதி செலவுகளைக் குறைக்க இந்தியா மற்றும் சீனாவுடன், மாலத்தீவு ரூபாயில் செலுத்துவதற்கான வாய்ப்புகளைக் கலந்து ஆலோசித்து வருவதாக அந்நாட்டு அமைச்சர் சயீத் ஏப்ரல் மாதத்தில் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கிடையேயான சர்வதேச வர்த்தகத்தை உள்ளூர் நாணயத்தில் மேற்கொள்வதில் வெற்றிகண்டுள்ளது மாலத்தீவு.


Click it and Unblock the Notifications