ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் மார்க் ஜூக்கர்பெர்க் வரை வெற்றிக்கு வழி காட்டிய இந்திய மகான்! யார் இவர்..?

Posted By: SAIRENU RENUKA R
Subscribe to GoodReturns Tamil

இமயத்தின் அணைப்பிலிருக்கும் அழகிய நகரம் நைனிடால். ஆதனருகில் நாம் வாழ்த்து அட்டைகளில் காணும் இயற்கைக் காட்சி போன்று அழகிய பள்ளத்தாக்கு ஒன்றிருக்கிறது.

அதுவே கைஞ்சி. அங்கு உள்ள அழகிய கோயிலும் ஆசிரமமும் தான் உலகின் முதன்மை வெற்றியாளர்கள் தங்கள் தொழில் உயர்வுக்கு வழிகளறிந்த இடம்.

வியப்பாக இருக்கின்றதா? விளக்கமாகவே பார்க்கலாம்

கைஞ்சி ஆசிரமத்தில் தான் நீப் கரோரி பாபா எனும் மகான் வாழ்ந்தார். இவர்தாம் மார்க் ஜூக்கன்பர்க் (பேஸ்புக் நிறுவனர்), ஸ்டீவ் ஜாப்ஸ் (ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்தாபகர்) போன்ற தொழில்நுட்ப மேதாவிகளைக் காந்தம் போன்று கவர்ந்திழுத்தவர்.

ஜூக்கன்பர்க் பாபாவை எவ்வாறு சந்தித்தார்?

ஜூக்கன்பர்கிற்குப் பாபாவை அறிமுகம் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

கைஞ்சி ஆலய அறக்கட்டளையின் செயலாளர் திரு விநோத் ஜோஷி ஜூக்கன்பர்கை கிழிசல்கள் கொண்ட ஜீன்ஸ் அணிந்திருந்த ஒரு இளைஞனாக நினைவுகூர்கிறார். ஆனால் அவரைப் பற்றி ஜோஷிக்கு ஞாபகங்கள் ஆத்தனைத் துல்லியமாக இல்லை. இன்று பத்து கோடி மக்களுக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் அன்றாடப் பழக்கங்களுள் ஒன்றாகக் கருதும் முகநூல் அப்போது தோன்றியிருக்கவில்லையே!

ஆனால் அந்த இளைஞன் நைனிடாலிலிருந்து 65 கிமி தொலைவிலுள்ள பந்த்நகருக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து கார் மூலம் நீப் கரோரி பாபாவின் ஆசிரமத்திற்கு வந்தது திரு ஜோஷி அவர்களுக்கு நினைவிருக்கிறது.

நீப் கரோரி பாபா 1973ல் அமரத்துவம் எய்தினார். ஆயினும் இன்றும் பல உயர்நிலை அமெரிக்கர்களைத் தன் அருளால் தன்பால் கவர்ந்து இழுத்து வருகிறார்.

 

மேற்கை இழுக்கும் மேன்மை

அதோ! ஊசியிலைக் காடுகள் உயர்ந்து நிறையும் அழகிய மலைகளால் சூழப்பட்ட பூமி! கலகல த்வனி செய்து நீரோடையொன்று அருகில் ஓடுகிறது. இந்தத் தெய்வீக எழில்கொஞ்சும் இடத்தில் தான் பாபாவின் ஆசிரமம் உள்ளது. அதன் எளிமையைக் கண்டு "ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் முதல் பல உயரடுக்கு மக்கள் பணிந்து வழிபாடு செய்யும் மகான் வாழ்ந்த இடமா இது?" என்று நாம் வியந்து தான் போகிறோம்.

இங்கு ஐந்து அழகிய கோயில்கள் உள்ளன. அவற்றிலொன்று அனுமன் அருளும் ஆலயம். கோயில்களுக்கு எதிரே சதுரத் தூண்களையுடைய வெண்ணிறக் கட்டிடம் இருக்கிறது. அது தான் மகான் வாழ்ந்த இடம். அதனைப் பாபாவின் பக்தர்கள் வெள்ளை மாளிகை என்று அழைக்கின்றனர்.

 

ஸ்டீவ் ஜாப்ஸ் காட்டிய வழி

நம் பாரதப் பிரதமர் திரு நரேந்தி்ர மோடி அவர்களின் அமெரிக்கப் பயணத்தின்போது ஜூக்கன்பர்க் அவரைச் சந்தித்தார். அப்போது அவர் தான் பாபாவின் ஆசிரமத்திற்கு வந்திருந்ததைக் குறித்துப் பிரதமரிடம் கூறினார். "என் நிறுவனத்தின் குறிக்கோள் என்று நான் எதைக் கருதுகிறேனோ அதனுடன் நான் மீண்டும் முழு மனத்துடன் இணைய வேண்டுமெனில் நான் இந்தியாவிலுள்ள அந்த ஆலயத்திற்குச் சென்று வர வேண்டும் என்று ஜாப்ஸ் என்னிடம் தெரிவித்தார். அவர் ஆப்பிள் நிறுவனம் எப்படி இருக்கவேண்டும், அதன் எதிர்காலத்தை நோக்கிய பார்வை எங்ஙனம் அமைய வேண்டும் ஆகிய பரிணாமங்களை வகுக்கும் சிந்தனையில் இருந்தபோது, ஆதியில் அவர் இந்தியாவிற்குத்தான் வந்ததாகக் கூறினார்" என்று ஜூக்கன்பர்க் தெரிவித்தார்.

பயண நினைவுகள்

ஜூக்கன்பர்க் ஆசிரமத்திற்கு வந்தபோது அவர் கையில் ஒரு புத்தகம் மட்டுமே இருந்தது. மாற்று ஆடை கூட இல்லாமல் வந்திருந்தார் அவர். ஒருநாள் மட்டுமே தங்கும் உத்தேசத்துடன் வந்திருந்த அவர் பந்த்நகரில் வீசிய புயல் காரணமாக விமானங்கள் புறப்பட இயலவில்லையாதலால் ஆசிரமத்தில் இரு நாட்கள் தங்கினார்.

"நான் பாபாவின் ஆசிரமம் வந்தடைந்தேன். அதன்பின்னர் நான் ஒரு மாதம் பயணத்திலேயே கழித்தேன். மக்களைப் பார்ப்பதிலும், அவர்கள் ஒருவர்க்கொருவர் தொடர்பு கொள்வதைப் பார்வையிடுவதிலும் என் காலம் ஓடியது. இவ்வுலகில் உள்ள எல்லோரும் தொடர்பு கொள்ளவும் தொடர்பில் இருக்கவும் ஒரு வலிமையான சாதனம் இருந்தால் இவ்வுலகம் இன்னும் சிறந்ததாக விளங்கும் என்பதனை அந்தக் காலகட்டத்தில் நேரடியாக உணரும் அனுபவம் எனக்குக் கிட்டியது. அது நாங்கள் என்ன செய்கிறோமோ அதன் முக்கியத்துவத்தை எனக்கு மேலும் வலுப்படுத்தியது, கடந்த பத்து வருடங்களாக நாங்கள் முகநூலை உருவாக்கி நடத்தி வருகையில் அதனை எப்போதும் நினைவில் கொண்டிருக்கிறேன்" என்று ஜூக்கன்பர்க் தன் பயண நினைவுகளைத் திரு மோடி அவர்களிடம் பகிர்ந்து கொண்டார்.

 

பாபாவின் போர்வை

நீப் கரோரி பாபாவின் ஆலயத்தில் பாபா உயிர் உருவச் சிலையாக, உயிர்ப்பான வடிவமாக இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்குப் பர்பரிக் கட்டங்கள் கொண்ட போர்வை அணிவிக்கப்படுகிறது.

ஆலயத்தில் ஸ்டீவ் ஜாப்ஸைக் குறித்துத் திரு லாரி ப்ரில்லியண்ட் எழுதிய கடிதம் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. திரு ப்ரில்லியண்ட் வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்தில் அறிவியல் ஆலோசகராகவும், ஈபே நிறுவனத் தலைவர் ஜெஃப் ஸ்கால் ஏற்படுத்திய ஸ்கால் உலகளாவிய அச்சுறுத்தல்கள் நிதி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தவர். ஸ்டீவ் ஜாப்ஸ் தன் அந்திமக் காலம் வரை பாபாவின் திருவுருவப் படங்களைத் தன் படுக்கைக்கு அருகில் வைத்திருந்ததாக இவர் கூறுகிறார்.

 

நிழற்படத்தின் நிஜம்

"நான் ஸ்டீவைச் சந்தித்த போது நாங்கள் எல்லோரும் இளைஞர்கள். இவ்வுலகம் சிறந்த சாத்தியங்கள் நிறைந்த ஒரு அற்புத இடமாக எங்களுக்குத் தோன்றியது! அத்துடன் ஆன்மீகத் தேடலும் எங்களுக்குள் முளைவிட்டிருந்தது. எனவே இயல்பாகவே எங்கள் பயணம் இந்தியாவை நோக்கி அமைந்தது" என்கிறார் திரு லாரி ப்ரில்லியண்ட்.

இந்த வெற்றியாளர்களின் வழிகாட்டியாக விளங்கிய நீப் கரோரி பாபாவின் பூத உடல் மறைந்துவிட்டாலும் அவர் இன்னமும் பலருக்குத் தோழனாக, ஆறுதலாக, வழிகாட்டியாக, குருவாக விளங்கி வருகிறார்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Meet the Baba from whom Mark Zuckerberg took his business tip

Meet the Baba from whom Mark Zuckerberg took his business tip
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns