அமெரிக்காவில் அதிபர் தேர்தல் முடிவடைந்த பிறகும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புதிய அரசியல் விளம்பரங்களுக்கு போட தடை தொடரும் என மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. மெட்டா நிறுவனம் தனது பிளாக் போஸ்ட்டில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த முறை அமெரிக்காவில் அதிபர் தேர்தலின் போது பல்வேறு போலியான தகவல்கள் பரவுவதற்கு சமூக வலைத்தளங்கள் காரணமாக இருந்தன என்றும் இந்த போலியான தகவல்கள் வாக்காளர்கள் மத்தியில் அவர்கள் வாக்களிக்கும் முடிவினை எடுப்பதில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் டெக் நிறுவனங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என அமெரிக்க அரசு கண்டித்தது.

எனவே கடந்த முறை நிகழ்ந்த தவறு இந்த முறை நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் அமெரிக்க டெக் நிறுவனங்கள் கவனமாக இருக்கின்றன. எனவே மெட்டா, கூகுள் ஆகிய நிறுவனங்கள் தங்கள் விளம்பர கொள்கைகளை மாற்றின. இந்த முறை அதிபர் தேர்தலில் போலியான தகவல்களும், வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான தகவல்களும் பரவுவதை தடுப்பதற்காக தொழில்நுட்ப நிறுவனங்கள் கூடுதல் முயற்சிகளை எடுத்துள்ளன.
அந்த அடிப்படையில் மெட்டா நிறுவனம் தங்கள் தளங்களில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. தேர்தலின் இறுதி கட்டத்தின் போது அரசியல் விளம்பரங்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை பற்றி விவாதிக்க போதிய நேரமில்லாமல் போகலாம் என்பதால் அக்டோபர் 29க்கு பின்னர் புதிய அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்தது.
தங்களின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புதிதாக அரசியல் விளம்பரங்களை போடுவதற்கு தடை விதித்தது. இந்த தடை அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவடைந்த பிறகும் தொடரும் என மெட்டா நிறுவனம் தன்னுடைய பிளாக் போஸ்டில் தெரிவித்துள்ளது. எந்த தேதியில் இந்த தடை நீக்கப்படும் என்பது குறித்த விவரங்களை மெட்டா வெளியிடவில்லை. எதற்காக இந்த தடை நீட்டிக்கப்படுகிறது என்ற விவரமும் வெளியிடப்படவில்லை.
அக்டோபர் 29ஆம் தேதிக்கு முன்னர் போடப்பட்ட அரசியல் விளம்பரங்கள் தொடர்ந்து தங்களுடைய சமூக வலைத்தள செயலிகளில் ஒளிபரப்பாகும் என தெரிவித்துள்ளது. இந்த விளம்பரங்களை எடிட் செய்வதற்கான குறிப்பிட்ட ஆப்ஷன் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டிலும் மெட்டா நிறுவனம் இதே போன்ற ஒரு பாலிசியை அமெரிக்க தேர்தலின் போது கடைபிடித்தது. முன்னதாக கூகுள் நிறுவனமும் இதே போன்ற ஒரு விளம்பர கொள்கையை கடந்த மாதம் அறிவித்தது. அதாவது தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற பிறகு தேர்தல் தொடர்பாக கூகுளில் போடப்பட்ட விளம்பரங்கள் நிறுத்தப்படும் என தெரிவித்திருந்தது.


Click it and Unblock the Notifications