உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றாக மெட்டா நிறுவனம் இருக்கிறது. மெட்டா நிறுவனத்திற்கு உட்பட்ட பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்டவை கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய சமூக வலைதள ஊடகங்களாக திகழ்கின்றன.
அண்மை காலமாக ஏஐ பிரிவில் அதிக கவனம் செலுத்தி வரும் மெட்டா நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 20 சதவீதம் பேர் அதாவது 16 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது மெட்டாவின் பல்வேறு பிரிவுகளில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் தான் நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தங்களுடைய குழுக்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களிடம் பேக்கப் பிளானோடு தயாராக இருங்கள் என கூறியிருந்தார்களாம்.

இந்த சூழலில் தான் நிறுவனம் 20% ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க போவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த பணி நீக்கம் எத்தனை மாதங்களுக்குள் நிறைவேற்றப்படும் எந்தெந்த பிரிவுகளில் இருக்கக்கூடிய ஊழியர்கள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து ஏஐ தொழில்நுட்பத்தில் அதிக அளவு முதலீடு செய்து வருகிறது மெட்டா.
ஆனால் மார்க் எதிர்பார்த்த அளவு வெற்றி இன்னும் கிடைக்கவில்லை. ஓபன் ஏஐ போன்ற நிறுவனங்களுக்கு நிகராக கூட மெட்டாவால் ஏஐ பிரிவில் தலைதூக்க முடியவில்லை. இதற்காக பல கோடிகளை முதலீடு செய்தும், தேடி தேடி நிபுணர்களை வேலையில் அமர்த்தியும் பலன் கிடைக்கவில்லை. இந்த சூழலில் தான் நிறுவனத்தை மறுக்கட்டமைப்பு செய்கிறோம் என காரணம் கூறி தொடர்ச்சியாக ஊழியர்கள் பணி நீக்கத்தை கையில் எடுத்து வருகிறது மெட்டா.

ஏஐ பிரிவில் கூட புதிதாக வேலைக்கு ஆட்களை தேர்வு செய்து சில மாதங்களிலேயே அவர்களை வேலையில் இருந்து தூக்கியது. 2022 ஆம் ஆண்டு நவம்பரில் மெட்டா 11 ஆயிரம் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கியது பின்னர் நான்கே மாதங்களில் மீண்டும் 10 ஆயிரம் பேரை வேலையிலிருந்து நீக்கியது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்த வண்ணம் இருக்கிறது. தற்போது மேலும் 16 ஆயிரம் பேரை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
ஊழியர்கள் எண்ணிக்கை குறைத்து விட்டு அவர்களின் சம்பளத்தை சேமித்து அதனை ஏஐ தொழில்நுட்ப பிரிவுக்கான செலவுகளுக்கு பயன்படுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்து இருக்கிறதாம். அது மட்டும் இல்லாமல் கூடிய விரைவில் இந்த நிறுவனம் 600 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான டேட்டா சென்டர்களை அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. எனவே தங்களுடைய வேலையில் கணிசமான பிரிவுகளில் ஏஐ ஏஜெண்ட்டுகளை பணியில் அமர்த்தி அந்த வேலையில் இருக்கக்கூடிய மனிதர்களை பணியில் இருந்து நீக்க திட்டமிட்டு இருக்கிறதாம். ஏஐ மற்றும் wearable devices பிரிவுகளில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் மார்க் ஊழியர்கள் வாழ்வாதாரத்தை பறிக்கிறார் என ஊழியர்கள் திட்டி தீர்க்கின்றனர்.


Click it and Unblock the Notifications