அமெரிக்காவை சேர்ந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவில் இருந்து முழுமையாக வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ரஷ்யாவில் செயல்படும் மைக்ரோசாப்ட் துணை நிறுவனங்கள் திவால் நிலைக்கு சென்று விட்டதாக அறிவித்திருக்கின்றன.
மைக்ரோசாப்ட் ரஷ்யா நிறுவனம் திவால் நிலைக்கு சென்று விட்டதாகவும் ரஷ்யாவில் தங்களுடைய செயல்பாடுகளை அதிகாரப்பூர்வமாக நிறுத்திக் கொள்வது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்திருப்பதாகவும் எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. 2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கியது. இதனை அடுத்து அமெரிக்க அரசு ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விட்டது.

அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்களுடைய செயல்பாடுகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு வந்தன. அந்த வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனமும் 2022 ஆம் ஆண்டிலிருந்து ரஷ்யாவில் தங்களுடைய செயல்பாடுகளை படிப்படியாக குறைத்துக் கொண்டு வந்தது. ஏற்கனவே தங்களின் விண்டோஸ் ஆப் ஸ்டோரில் இருந்து ரஷ்ய அரசுக்கு சொந்தமான செய்தி ஊடகமான ஆர்டி மொபைல் செயலியை நீக்கியது.
மேலும் ரஷ்யா அரசு வழங்கக்கூடிய விளம்பரங்களை தங்களுக்கு சொந்தமான ஊடகங்கள் மற்றும் தளங்களில் மைக்ரோசாப்ட் வெளியிடாமல் தடை செய்தது. இது ரஷ்ய அரசை கோபமடைய செய்தது. இந்நிலையில் மைக்ரோசாப்டின் துணை நிறுவனமான மைக்ரோசாப்ட் ரஷ்யா தாங்கள் திவால் நிலைக்கு சென்று விட்டதாக அறிவித்து முழுவதுமாக ரஷ்யாவில் இருந்து வெளியேற உள்ளது. இதன் மூலம் மைக்ரோசாப்டுக்கு சொந்தமாக ரஷ்யாவில் செயல்பட்ட மூன்று நிறுவனங்கள் மூடப்படுகின்றன.
ஏற்கனவே ஆல்பாபெட்டுக்கு சொந்தமான கூகுள் நிறுவனம் ரஷ்யாவில் செயல்பாட்டை நிறுத்தியது. ரஷ்யாவில் இயங்கி வந்து கூகுள் நிறுவனம் 2022 ஆம் ஆண்டிலேயே திவால் நிலைக்கு சென்று விட்டதாக அறிவித்தது. ரஷ்ய அரசை பொருத்தவரை மேற்கத்திய நாடுகளின் ஊடகங்கள் தங்கள் நாடுகளில் செயல்படுவதற்கு எந்த ஒரு ஒத்துழைப்பையும் தரவில்லை. குறிப்பாக அமெரிக்க அரசு தங்கள் மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதிப்பதை தொடர்ந்து ரஷ்ய அரசு மேற்கத்திய நாடுகளின் செயலிகள் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்குகளை முடக்கியது.
இத்தகைய சூழலில் தான் மைக்ரோசாப்ட் நிறுவனம் ரஷ்யாவில் தன்னுடைய செயல்பாடுகளை முழுவதுமாக முடித்து கொள்வதற்கு முன் வந்திருக்கிறது. இரு தினங்களுக்கு முன்னர் தான் ரஷ்ய அதிபர் விளாதிமிட் புதின் வெளிநாட்டு சேவை வழங்குநர்களான மைக்ரோசாப்ட் , ஸூம் உள்ளிட்டவற்றை ரஷ்யாவில் நாம் செயல்பட விடக்கூடாது உள்நாட்டு நிறுவனங்களுக்கு நாம் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications