சவுதி அரேபியா: உலகிலேயே முதன்முறையாக சவூதி அரேபியா பேரிச்சம் பழத்தை அடிப்படை பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஒரு பானத்தை அறிமுகம் செய்துள்ளது.
பெப்சி, கோகோ கோலா உள்ளிட்ட பானங்களில் அதிகம் சர்க்கரை சேர்க்கப்படுவதால் அது உடல்நலத்திற்கு கேடு என தொடர்ச்சியாக கூறப்படுகிறது. இருந்தாலும் அதன் சுவைக்கு அடிமையானவர்களால் அவற்றை விட முடியவில்லை. இந்நிலையில் தான் சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான நிறுவனம் உலகிலேயே முதன்முறையாக பேரிச்சம் பழத்திலிருந்து ஒரு பானத்தை தயார் செய்துள்ளது.

இதற்கு மிலாஃப் கோலா என சவுதி அரேபியா பெயர் சூட்டியுள்ளது. கோகோ கோலா மற்றும் பெப்சி உள்ளிட்டவற்றுக்கு போட்டியாகவே இந்த பானத்தை சவுதி அரசு விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த பானத்தில் சர்க்கரையே சேர்க்கப்படவில்லை என்றும் உடல் நலத்திற்கு ஆரோக்கியமான பானம் இது என்றும் சவுதி அரேபியா கூறியுள்ளது.
வழக்கமாக நாம் அருந்தக்கூடிய சோடாக்களைப் போலவே இது சுவையானதாக இருக்கும் ஆனால் அவற்றுடன் ஒப்பிடும்போது இதில் கிடைக்கும் பலன்கள் அதிகம் என சவுதி அரேபியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா பொது முதலீட்டு நிதியம் என்று அழைக்கப்படும் அரசு சார்ந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான துராத் அல் மதினா என்ற நிறுவனம் தான் இந்த பானத்தை தயாரித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற ரியாத் பேரிச்சம் பழ திருவிழாவில் இந்த பானமானது அறிமுகம் செய்யப்பட்டது. இதில் சவுதி அரேபிய வேளாண் துறை அமைச்சர் அப்துல் ரகுமான் அல் ஃபட்லியும் கலந்து கொண்டார்.
உலக அளவில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் மிகச் சிறந்த ஒரு உணவாக பேரிச்சம்பழம் கருதப்படுகிறது. பல்வேறு பானங்களிலும் சர்க்கரைக்கு பதிலாக இனிப்புக்கு பேரிச்சம் பழத்தை பயன்படுத்தும் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இந்த ஐடியாவை அடிப்படையாகக் கொண்டு இந்த மிலாஃப் கோலாவை தயாரித்திருப்பதாக துராத் அல் மதினா நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்கள் நாட்டிலேயே கிடைக்கக்கூடிய தரமான பேரிச்சம் பழங்களை கொண்டு இவை தயாரிக்கப்படுகிறது என்றும் மற்ற பானங்களில் அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது உடல் நலத்திற்கு கேடு ஆனால் அதே சுவையில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஊட்டச்சத்து நிறைந்த பானம் இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான பொருளாக பேரிச்சம் பழம் சேர்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் தர கட்டுப்பாட்டு சோதனைகள் அனைத்தையும் மிலாஃப் கோலா கடந்து தற்போது விற்பனைக்கு வந்திருக்கிறது என்றும் இது சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பங்கேற்ற பலரும் இந்த பானத்தை அருந்திவிட்டு அருமையான சுவையில் இருக்கிறது என தெரிவித்துள்ளனர்.
கூடிய விரைவில் பேரிச்சம்பழத்தை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு உணவுப் பொருட்களை தங்கள் நிறுவனம் அறிமுகம் செய்யும் என துராத் அல் மதினா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications