அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது, நேற்று அமெரிக்கா ஈரானுக்கு 24 மணிநேர கெடு விதித்த நிலையில், இக்காலம் முடியும் வேளையில் ஈரானின் உச்ச தலைவராக இருக்கும் முஜ்தபா கமெனி-யின் பதிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ் வழித்தடத்தில் ஈரான் 3 எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதிற்கு பதிலடியாக அமெரிக்கா ஈரான் மீது கடந்த 3 நாட்களில் 170 முறை ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியதில் ஈரானின் பெருமளவிலான ராணுவ தளங்களும், கட்டமைப்புகளும் பாதிப்புக்குள்ளானது.

இந்த நிலையில் அமெரிக்கா 24 மணிநேரம் கெடுவிதித்து, ஹார்முஸ் வழித்தடத்தை முழுமையாக திறப்பதாக அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படையாக பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும், இதேபோல் சரக்கு கப்பல்கள் மீதான தாக்குதல்களை முழுமையாக நிறுத்த வேண்டும் என கட்டளை விதித்திருந்தது. இந்த 24 மணிநேர கெடு என்பது ஜூலை 11 ஆம் தேதி உடன் முடிவடைகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், ஈரானின் உச்ச தலைவரான முஜ்தபா கமெனி தனது டெலிகிராம் கணக்கில் அவர் கைப்பட எழுதி வெளியிட்ட செய்தியில், தனது தந்தை அயத்துல்லா அலி கமெனியின் கொலைக்கு பழிவாங்குவது என்பது ஈரான் மக்களின் உரிமை, இதேபோல் எங்கள் நாட்டு தலைவர் மற்றும் மக்களை கொன்ற கொலையாளிகள் தங்கள் படுக்கையில் அமைதியாக இறக்கும் கனவை கல்லறைக்கு எடுத்துச் செல்லட்டும் என முஜதபா கமெனி தனது பதிவில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பு ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் இன்று காலையில் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில் என்னுடைய உயிருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அடுத்த நொடி அமெரிக்க ராணுவம் என்ன செய்ய வேண்டும் என்ற கட்டளையை தான் ஏற்கனவே கொடுத்துள்ளதாகவும், ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 'என்னை' அமெரிக்க அதிபரை கொலை செய்தால் 1000 ஏவுகணைகள் உடனடியாக ஈரானை நோக்கி தாக்குதலுக்கு தயாராக உள்ளது என தெரிவித்தார். இதேபோல் அமெரிக்க ராணுவம் அடுத்த வருடத்திற்கு ஈரானை மொத்தமாக காலி செய்ய தயாராக இருப்பதாக உறுதியுடன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications