அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அமெரிக்க உயர் அதிகாரிகளை கொலை செய்ய ஈரான் திட்டமிடுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது போரை தொடங்கின. இதில் ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதனால் ஈரான் மக்களும் ராணுவமும் டிரம்ப் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.
ஈரான் போர் முடிவுக்கு வராமல் பல மாதங்களாக நீடிக்கிறது. இந்நிலையில் இஸ்ரேல் நாட்டு செய்தி நிறுவனமான Israel Hayom அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளை குறிவைத்து ஈரான் டிரோன் மூலம் குண்டு வீசி கொலை செய்ய சதி திட்டம் தீட்டுவதாக இஸ்ரேலிய உளவுத்துறை அமெரிக்காவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட டிரோன்களை பயன்படுத்தி டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது நிர்வாக அதிகாரிகளை குறிவைக்க ஈரான் சதித்திட்டம் தீட்டியுள்ளது. வழக்கமான பாதுகாப்பு முறைகளை கொண்டு எளிதில் தடுத்து நிறுத்த முடியாதவையாக இந்த அதிநவீன டிரோன்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் இந்த எச்சரிக்கையை அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ளது.
முன்னதாக அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் தங்களுக்கு கிடைத்த சில அச்சுறுத்தல்கள் குறித்து ஆராய்வதற்காக, இஸ்ரேலின் மொசாத் அமைப்பிடம் உதவி கேட்டிருந்தன. அதன் அடிப்படையில்தான், இஸ்ரேலிய உளவுத்துறை இந்த தகவல்களை சரிபார்த்து உறுதிப்படுத்தியுள்ளது என அந்த செய்தி கூறுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக மொசாத் இயக்குனர் ரோமன் கோஃப்மன் அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு, சி.ஐ.ஏ இயக்குனர் ஜான் ராட்க்ளிஃப் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இதனால் டிரம்ப்புக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த அச்சுறுத்தல்கள்தான், ஈரான் போரில் தற்போதைக்கு டிரம்ப் கடுமையான நிலைப்பாட்டை எடுக்காமல் தவிர்க்க காரணம் எனவும் கூறப்படுகிறது.
இஸ்ரேலின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து அமெரிக்காவின் சில முக்கிய உயர் அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதிபர் டொனால்ட் டிரம்பின் பொதுப்பயணங்கள் மற்றும் வெளிப்படையான நிகழ்ச்சிகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன என தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரம்பிற்கு வழக்கமான பாதுகாப்புடன் சேர்த்து, டிரோன்களை இடைமறித்து அழிக்கக்கூடிய சிறப்பு தற்காப்பு அமைப்புகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என கூறப்படுகிறது.
இந்த டிரோன் சதித்திட்டம் குறித்த தகவல்களை சி.ஐ.ஏ, வெள்ளை மாளிகை ஆகியவை இதுவரை நேரடியாக வெளிப்படையாக அறிவிக்கவில்லை. ஏற்கனவே ஜூலை மாதம் டிரம்ப் துருக்கி நாட்டுக்கு சென்றிருந்த போது இதே போல ஈரான் அவரை படுகொலை செய்ய முயற்சி செய்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவர் உணவு கொண்டு செல்லும் வாகனத்தில் ரகசியமாக விமானம் ஏறி தப்பியது வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது முதலே டிரம்பின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

